dc.description.abstract |
தோல் வாத்தியங்கள் தமிழர் சமூகத்தின் அடிப்படையான பண்பாட்டு அடையாளமாகக் கொள்ளப்படுகின்றன. தமிழ் சமூகத்தின் வரலாற்றில் இவற்றின் பயில்வு நீண்ட தொடர்ச்சியைக் கொண்டதாகவுள்ளது. பாரம்பரிய தமிழ் சமூகத்தினரால் பயன்படுத்தப்பட்ட தோல்வாத்தியங்களின் நீட்சியை மட்டக்களப்பு தமிழ் மக்களினால் பயன்படுத்தப்படும் தோல்வாத்தியங்களில் கண்டுணரக் கூடியதாக உள்ளது. மத்தளம், உடுக்கு, பறை, கொட்டு, தப்பு போன்றன மட்டக்களப்பில் உருவாக்கப்படும் பிரதான தோல்வாத்தியங்களாக விளங்குகின்றன. மட்டக்களப்பில் இந்த தோல்வாத்தியங்கள் பாரம்பரிய கலை நிகழ்வுகள், சமூக நிகழ்வுகள் என்பவற்றில் பிரதானம் பெறுகின்றன. இவை மட்டக்களப்பில் உள்ள சுதேச கலைஞர்களினால் உருவாக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் வருமானம் உள்ளுர் பொருளாதார ஈட்டத்திற்கு வளஞ்சேர்ப்பதாக அமைவதுடன், தோல்வாத்தியக் கருவி உருவாக்கும் கலைஞர்களின் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் பிரதான இடம்பெறுகின்றது. பாரம்பரிய தோல்வாத்தியங்களை உருவாக்கும் கலைஞர்கள் சமகாலச் சமூகச் சூழலில் அத்தொழிலை மேற்கொள்வதில் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். இந்த ஆய்வின் நோக்கமாக பாரம்பரிய தோல்வாத்தியங்களின் சமூக, பண்பாட்டு, பொருளாதார முக்கியத்துவத்தை அடையாளங்காணல், பாரம்பரிய தோல் வாத்தியக் கலைஞர் எதிர்கொள்ளும் சவால்களை அடையாளம் காணல், அச்சவால்களுக்கான தீர்வுகளை முன்மொழிதல் என்பன அமைகின்றன. இவ்வாய்வு சமூகம் தொடர்பான ஒர் ஆய்வாக விளங்குவதால் பண்புசார் ஆய்வு நுணுக்கம் பின்பற்றப்படும். ஆய்வுக்கான தகவல்கள் பிரதான தகவல் வழங்கி, குழுநிலைக் கலந்துரையாடல், நேரடி அவதானிப்பு என்பனவற்றின் மூலம் பெற்றுக்கொள்ளப்படும். இவ்வாய்வின் மூலமாக பாரம்பரிய தோல்வாத்தியக் கலைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளும் முன்மொழியுப்படும். இது எதிர்காலத்தில் பாரம்பரிய கலைப்பயில்வுடன் தொடர்புடையவர்கள் அதனை தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதற்கான அடிப்படைகளை முன்மொழியும். |
en_US |