dc.description.abstract |
இலங்கையிலே நிலவி வருகின்ற வழிபாட்டு மரபுகளில் முருக வழிபாடு பிரசித்தானது. இவ்வழிபாடு புராதன காலத்திலிருந்து சமூக வரலாற்றுடனும், சூழலியல் சார் பண்பாடுகளுடனும் இணைவு பெற்று வளர்ந்து வந்துள்ளது. பண்டைக்காலம் முதலாகத் தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான அரசியல், வணிக, பண்பாட்டு உறவுகளால் முருக வழிபாடு இங்கு வளர்ச்சியடைந்திருப்பினும், இலங்கைக்கே உரித்தான சில வழிபாட்டம்சங்களும் இதில் காணப்படுகின்றன. இலங்கையில் முருக வழிபாட்டின் தொன்மையைப் பொம்பரிப்பு, கந்தரோடை ஆகிய இடங்களிற் கிடைத்த வேல், காவடிச் செதில்கள் ஆகிய சின்னங்களால் உறுதிப்படுத்த முடிகின்றது. கி.பி.2ஆம் நூற்றாண்டிற்குரிய நாணயங்கள் அக்குறுகொட, புளியங்குளம், கந்தரோடை ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. அவற்றிலே முருக வழிபாட்டின் புராதனம் தெளிவாகின்றது. கி.பி.13ஆம் நூற்றாண்டுக்குரிய வில்லூன்றிக் கந்தசுவாமி கோயிலிற் கிடைத் கல்வெட்டு கிழக்கிலங்கை முருக வழிபாடு பற்றி அறியக் கூடிய புராதன சான்றாதாரமாகும். பொலன்னறுவையிற் கிடைத்த சுப்பிரமண்யருக்கான கோயிற் சிதைவும், வெண்கலப்படிமமும் முருக வழிபாட்டின் வளர்ச்சியைக் காட்டுகின்றன. யாழ்ப்பாணத் தமிழ் மன்னர் ஆட்சிக்காலப் பகுதியில் வெளியிடப்பட்ட நாணயங்களில் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் சிற்றுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் லங்காதிலக, கடலாதெனிய விகாரைகளில் உள்ள குமாரக்கடவுளுக்கானத் தனிக் கோட்டம் பௌத்தசமய மரபில் முருக வழிபாடு செலுத்திய செல்வாக்கைப் புலப்படுத்துகின்றது. இலங்கையின் முருக வழிபாட்டில் கதிர்காமத்திற்குரிய இடம் குறிப்பிடத்தக்கது. இலங்கையின் முருகவழிபாட்டில் கிழக்கிலங்கையிலே பிரசித்தமுடையதாக விளங்கும் திருப்படைக் கோயில்களுக்கு முக்கியத்துவம் உண்டு. முருக வழிபாடுகள் காலம் காலமாக இலங்கை மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருவதனால் அவ்வழிபாட்டின் தொன்மையையும், தனித்துவங்களையும் அடையாளப்படுத்துவதும், கிழக்கிலங்கையிலுள்ள முருகன் கோயில்களில் இடம் பெறும் வழிபாடுகளுக்கிடையிலான பொதுமைகளையும், தனித்துவங்களையும் இனங்காண்பதும், இவ்வழிபாடுகளுடன் தொடர்பான பத்ததிகளின் முக்கியத்துவத்தினை வெளிப்படுத்துவதும், கிழக்கிலங்கையில் முருக வழிபாடு தொடர்பாக நிலவும் வாய்மொழிக் கதைகளில் உள்ள வரலாற்று மூலங்களை இனங்காண்பதுவும், முருக வழிபாட்டு முறைமைகளில் சமூக வழமைகள் இணைந்து கொண்டதன் பின்புலத்தினை மதிப்பிடுவதும் இவ்வாய்வின் நோக்கங்களாகும். இலங்கையில் தனித்துவமான முருக வழிபாட்டு முறைமைகளை அடையாளங் காண்பதில் உள்ள இடர்ப்பாடுகளே ஆய்வின் பிரதான பிரச்சினையாகவுள்ளது. இவ்வாய்வு வரலாற்று ஆய்வுமுறை, ஒப்பீட்டு ஆய்வுமுறை, விபரண ஆய்வுமுறையிலும் நிகழ்த்தப்பட்டுள்ளது. இலங்கையின் முருக வழிபாட்டு முறைகளே ஆய்வு எல்லையாகும். இவ்வாய்வானது
சிறப்பாக இலங்கையிலுள்ள முருகவழிபாட்டின் தனித்துவங்களை வெளிக்கொணர்வதனால் இலங்கையில் நிலவுகின்ற ஏனைய தெய்வ வழிபாடுகளின் தனித்துவங்களை ஆராய முற்படுவோருக்கு முன்னோடியாக அமைவதுடன், மிகப்பழமையான தெய்வ நம்பிக்கைகளையும் அவற்றுடன் தொடர்புடைய வழிபாடுகளையும் பின்பற்றுகின்ற சமுதாயங்களின் வரலாறு பற்றி ஆராய்வதற்கு வழிவகுக்கும். |
en_US |