Abstract:
புதிய அரசியலமைப்புத் தொடர்பான கலந்துரையாடல்கள் சமகாலச் சூழலில் முக்கியத்துவம் பெறுகின்றன.
இச்சந்தர்ப்பத்தில் புதிய யாப்புத் தொடர்பிலான தமிழ்ச் சிறுபான்மையினரின் அபிலாசைகள் எவை? அவற்றை
உத்தேச யாப்பில் உள்ளடக்குவதற்கான யதார்த்த சூழல் உள்ளதா? என்பதனை அறிந்து கொள்வது இவ்வாய்வின்
நோக்கமாகும். இவ்வாய்வானது பண்புசார் ஆய்வு முறையியல் அணுகுமுறையினை அடிப்படையாகக் கொண்டது.
இப்பண்புசார் தகவல்கள் இரண்டாம் நிலைத் தரவு மூலங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன. இரண்டாம் நிலைத்
தரவுகள், நூல்கள், ஆய்வு அறிக்கைகள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் மூலம் பெறப்பட்டுள்ளன. மேற்குறித்த
இரண்டாம் நிலைத் தரவுகள், பிரசுரிக்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் கணனி வலைத் தளங்களில் இருந்தும்
பெறப்பட்டுள்ளன. ஏன் அரசியல் யாப்பு மாற்றப்பட வேண்டும்? எனும் வினாவினை எழுப்புவோமானால்,
நடைமுறையில் இருக்கும் அரசியல் யாப்பில் காணப்படுகின்ற குறைபாடுகள் எனக் கூறமுடியும். குறிப்பாக
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, விகிதாசாரத் தேர்தல் முறைமை, இனப் பிரச்சினைக்கான தீர்வு என்பனவற்றைக்
குறிப்பிட முடியும். எவ்வாறாயினும், தமிழ்ச் சிறுபான்மை மக்களுடன் தொடர்பான விடயங்களாகப் பின்வருவனவற்றைக்
குறிப்பிட முடியும். அவையாவன: அரசின் தன்மை (ஒற்றையாட்சியா அல்லது சமஷ்டி ஆட்சியா), பௌத்த மதத்தின்
மேலாண்மை, அதிகாரப் பரவலாக்கம், அரசாங்கத்தின் தன்மை மற்றும் ஜனாதிபதித்துவ முறைமை ஆகியவற்றைக்
குறிப்பிடலாம். தமிழ்ச் சிறுபான்மை மக்களின் பிரதான அபிலாசையான சமஷ்டி அல்லது அதற்குச் சமமாகப்
பிராந்தியங்களின் ஒன்றியம் என்பதாகும். ஆயினும், ஒற்றையாட்சிக்கு மாற்றீடான ஒரு பதத்தைப்
பயன்படுத்துவதற்கான நிலைமையையே அவதானிக்க முடியும். எனவே, ஒற்றையாட்சி அல்லது சமஷ்டி என்பதனை
நேரடியாகக் குறிப்பிடுவதைத் தவிர்க்கின்றனர். பௌத்த மதத்தின் முதன்மை தொடர்பில் நோக்குவோமாயின்,
வெளிப்படையாகப் பௌத்த மதத்திற்கும், மறைமுகமாக ஏனைய மதங்களைப் பாதுகாக்கின்ற ஏற்பாட்டையும்
அதாவது தற்போதைய யாப்பில் உள்ளதைப் போன்று ஏற்படுத்த முயற்சிக்கப்படப் போகின்றது. அதிகாரப்
பன்முகப்படுத்தலைப் பொறுத்தவரை, தற்போதைய யாப்பில் உள்ள 13ஆம் திருத்தத்திற்கு அப்பால் செல்ல
முயற்சிக்கவில்லை. ஆயினும், சர்சைக்குரிய விடயங்களாகவிருந்த ஆளுநரின் அதிகாரங்கள் குறைக்கப்படும்
அதேவேளை, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் அத்தகைய அரசாங்கத்தின் கீழ்க் கொண்டுவரப்படுவதையே
முயற்சிக்கின்றனர். ஆயினும், இரண்டாம் மன்றத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கான பாதுகாப்பை வழங்க
முயற்சிக்கப்படுவதைக் காணலாம். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தொடர்பில், தமிழ் மக்கள் ஜனாதிபதியிடம்
உள்ள நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்படுவதை எதிர்பார்க்கின்றனர். மேலும் ஜனாதிபதித்துவ தேர்வு
முறைமையில் உள்ள சாதக அம்சத்தினை நிராகரிக்கவில்லை. எனினும் பெயரளவிலான ஜனாதிபதித்துவ
முறைமையும் அதனுடன் பிரதமர் தலைமையிலான பாராளுமன்ற அரசாங்க முறைமையையுமே ஏற்படுத்த
முயற்சிக்கின்றனர். மேற்கூறப்பட்ட கலந்துரையாடலின் அடிப்படையில் நடைமுறையில் உள்ள அரசியல் யாப்பைப்
புதியதோர் தோலினால் போர்த்தி, புதிய யாப்பாகக் கொண்டுவர முயற்சிக்கப்படுகின்றது.