Abstract:
மூன்று காலகட்டங்களில் மொத்தமாகப் பதினான்கு வருடங்கள் பட்டிருப்புத்தொகுதியை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய சி.மூ.இராசமாணிக்கம் அவர்கள் இருபத்திரெண்டு வருட காலம் முழுநேர அரசியல்வாதியாகச் செயற்பட்டு அத்தொகுதி மக்களால் மட்டுமல்லாது, முழு ஈழத்தமிழர்களினாலும் அதிகமாக நேசிக்கப்பட்டவர். அரசியலில் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்து அவர் சேவையாற்றியவர்களுள் முக்கியமானவராகத் திகழ்கின்றார். எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் அஹிம்சைப் பாதையில் அவரின் பிரதான தளபதிகளில் முன்னணியில் விளங்கிய சி.மூ.இராசமாணிக்கத்தின் அரசியற் பணிகளை நோக்குவது இவ்வாய்வின் முக்கியத்துவமாகும்.
பேரினவாதிகளால் சிறுபான்மை மக்கள் நசுக்கப்பட்டவேளையில் அரசியல் அனாதைகளாக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிராக குரல்கொடுத்த கிழக்கு மாகாணத் தமிழ்த் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இதுவரை கிழக்கு மாகாணத்தில் ஆவணப்படுத்தப்படவில்லை. அவ்வரிசையில் பட்டிருப்புத் தொகுதியின் முதன்மை வேட்பாளரான சி.மூ.இராசமாணிக்கம் முக்கியத்துவம்; பெறுகின்றார்.
இவருடைய அரசியற் பணிகளை நோக்கும் போது: திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் இவரால் துறைநீலாவணை, தாந்தாமலை, மட்டக்களப்பு, 35, 37, 39, 40 ஆம் கிராமங்களில் தடுக்கப்பட்டன. இலங்கை அரசுகளினால் காலத்திற்குக் காலம்; நடைமுறைப்படுத்தப்பட்ட தனிச் சிங்களச் சட்டத்தை நடைமுறைப்படுத்த எடுத்த முயற்சிகள் இவரால் தடுக்கப்பட்டன. இதற்காக பாத யாத்திரைகள், சத்தியாக்கிரக போராட்டங்கள், மாபெரும் பொதுக் கூட்டங்கள் இவரது தலைமையில் மட்டக்களப்புப் பகுதிகளில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதனால் வீட்டுக்காவல், சிறைவாசத்தை அனுபவிக்க வேண்டியேற்பட்டது. மட்டக்களப்பு மக்களிடம் காணப்பட்ட தீண்டாமைக்கு எதிராகச் செயற்பட்டார். தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் தமிழ், முஸ்லீம் மக்களை அரசியலில் ஒன்றிணையச் செய்தார்.
இவரது அரசியற் பணிகளினூடாக இனவாதப்போக்கில் செயற்பட்ட பேரினவாதிகளை கட்டுப்படுத்திய வழிமுறைகளை அறிவது அவசியமாகின்றது. இவர் அரசியலினூடாக சமூகத்துக்காற்றிய பணிகளையும் அறிந்துகொள்ளுவது இந்த ஆய்வின் முக்கிய விடயங்களுள் ஒன்றாயுள்ளது.