Abstract:
இலங்கையில் வாழும் இனங்களுள் ஆதிக் குடிகளாக வேடர்கள் காணப்படுகின்றனர். சாதாரண மனித வாழ்க்கைக்கு தம்மைத் தயார்படுத்திக்கொள்ளாது வேட்டையில் ஈடுபட்டுக் காடுகளில் வசிப்போர் வேடர்களாவர். அண்மைக் காலங்களில் இவர்கள் சாதாரண மனித வாழ்க்கைக்குத் தம்மைப் பழக்கமாக்கிக்கொண்டு இலங்கையிலுள்ள ஏனைய சமூகத்தினரைப் போன்று வாழும் நிலைக்கு மாறி வருகின்றனர். இருப்பினும் வாகரையில் காட்டு வாழ்க்கையை பழக்கமாக்கிக் கொண்டு வாழ்வோரும் உள்ளனர். மட்டக்களப்பில் வேட வம்சாவழியினர் வாழும் இடங்களாக பால்சேனை, வாகரை, பனிச்சங்கேணி, காயகங்கேணி, இரால் ஓடை, வாகனேரி, கோங்கணை, முறுத்தானை, பொண்டுகள் சேனை, சித்தாண்டி, கற்குடா, வாழைச்சேனை, கிரான், சந்திவெளி, களுவன்கேணி, திராய்மடு, முகத்துவாரம், வந்தாறுமூலை, பழுகாமம், கொக்கட்டிச்சோலை, கட்டுமுறிவு, நாசிவன்தீவு என்பன அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பில் வேட சமூகம் பற்றிய தடயங்களை இனங்காண்பது இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்வு முறையானது வரலாற்றடிப்படையில் அமைந்துள்ளது. ஆதிக் குடிகளான வேடரின் அவர்களின் சமூக வழமைகள், வாழ்வியல் மாற்றங்களை அறிந்துகொள்வதை நோக்காகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. தம்மை அடையாளம் காணமுடியாதளவிற்கு ஏனைய குடிகளோடு தம்மை இணைத்துக்கொண்டு வாழ்வதை அறிதல் ஆய்வின் முக்கிய குறிக்கோளாகும். கள ஆய்வை முதல்நிலைத் தரவாகக் கொண்டும் நூல்கள், கட்டுரைகள், இணையத்தள தகவல்களை இரண்டாம்நிலைத் தரவுகளாகக்கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது.
மட்டக்களப்புப் பிரதேசமானது பல்லினத்தவர்கள் இணைந்து வாழும் பிரதேசமாகக் காணப்பட்டாலும் இப்பிரதேசத்தின் பூர்வீகக் குடிகளாக வேடர்களே வாழ்ந்துள்ளமைக்கு இன்றும் சில பிரதேசங்களில் வாழ்கின்ற வேட வம்சாசழியினர் சான்றாகும். அவர்களது வழிபாட்டுச் சடங்கு முறைகளும், மட்டக்களப்பு பிரதேசத்தில் காணப்படுகின்ற புகழ்பெற்ற ஆலயங்கள் பலவற்றின் பூர்வீக வரலாறுகளும், அங்கு நடைபெறும் வேடர்களுடன் தொடர்பான சடங்கு முறைகளும் சான்றுகளாகும். மட்டக்களப்புப் பிரதேசத்தில் ஏனைய சாதியரிடையே பல குடிகள் காணப்படுவதைப்போன்று வேடர்களிடையேயும் சில குடிவகைகள் இனங்காணப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடிக்கும் ஒவ்வொரு தெய்வம் முக்கியத்துவப்படுத்தப்பட்டாலும் ஏனைய குடிகளுக்கான பணிகளும் காணப்பட்டமை நோக்கத்தக்கது.
வேட இனமென்று தம்மை அடையாளம் காணமுடியாதளவிற்கு ஏனைய குடிகளோடு தம்மை இணைத்துக்கொண்டு கலப்புற்று வாழ்கின்றனர். எனினும் முறுத்தானை, பால்ச்சேனை, பொண்டுகள் சேனை, காயங்கேணி, கோதாரிச்சேனை போன்ற இடங்களில் வாழ்பவரிடையே இன்றும் வேடச்சாயலின் பண்புகளைக் காணமுடிகின்றது.