Abstract:
பண்டைய மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தமையினை வரலாறுகள் எடுத்துக் காட்டுகின்றன. இலங்கை வரலாற்றில் கி.மு முதலாம் நூற்றாண்டில் பிராமிக் கல்வெட்டுக்களில் குளங்கள், கால்வாய்கள், வயல் நிலங்கள் பற்றிய செய்திகள் அதிகளவில் இடம்பெற்றன. மன்னராலும் தனிப்பட்ட மக்களாலும் பௌத்த சங்கங்களுக்கு வழங்கப்பட்ட தானங்களில் பெரும்பாலானவை குளங்களும் கால்வாய்களுமாகும்.
பௌத்த சமயம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டமையைத் தொடர்ந்து மன்னனாக வருகின்றவன் பௌத்த சமயத்திற்கும் நீர்ப்பாசனத்திற்கும் பணியாற்ற வேண்டும் என்ற மரபு ஏற்படுத்தப்பட்டது. இதனால் இலங்கையில் நீர்ப்பாசன விவசாயம் சிறப்புற்று விளங்கியது. நீர்ப்பாசன விவசாயத்திற்கு அடிப்படையாக குளங்கள், கால்வாய்கள் அமைந்தன. நிறுவனமயப்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வியக்கத்திற்கு செயற்கையாக அமைக்கப்பட்ட குளங்கள், கால்வாய்கள் என்பன மக்களின் ஜீவனோபாய அடிப்படையின் ஆதாரங்களாக வலுவடைந்து நீருடன் சம்பந்தமான விளைச்சல்கள் மக்களின் வாழ்வை வழிநடத்தின (கிருஷ்ணராஜா 2013:317). 13 ஆம் நூற்றாண்டில் இராஜரட்டை நீர்ப்பாசன வளர்ச்சி சீர்குலைந்தது. இதனால் இராஜரட்டையில் இருந்த மக்கள் ஈர வலயங்களை நோக்கி இடம் பெயர்ந்தனர். இதன் பின்னணியில் தனித்த வலயமாக மக்கள் குடியிருப்புக்கள் மாற்றம் கண்டன. 16 ஆம் நூற்றாண்டில் இராஜரட்டை நாகரிக பரம்பலில் இருந்து முற்றும் மாற்றமடைந்த நிலை ஏற்பட்டது.
இப்பின்னணியில் தமிழர்களின் இருப்பை வெளிப்படுத்தும் வகையில் திருகோணமலைப்பகுதியில் குளக்கோட்டன் முக்கியம் பெறுகின்றான். இவனது காலத்தில் வன்னிமையின் ஆட்சி முக்கியம் பெற்றது. குளக்கோட்டன் வழங்கிய சேவையில் நீர்ப்பாசனம் பிரதானமானது. நீர்ப்பாசன சேவையின் மூலமாக பல்லுயிர் பேணும் விடயங்கள் இவனால் மேற்கொள்ளப்பட்டன. கோணேசர் கல்வெட்டுப் பாடல்களை மையமாகக்கொண்டு வரலாற்றடிப்படையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக மன்னனின் சேவையாகக் காணப்பட்ட நீர்ப்பாசனத்தின் மூலம் பல்லுயிர் பேணும் தன்மையை ஆராய்வது இவ்வாய்வின் முக்கியத்துவமாகும்.