Abstract:
முற்காலத்தில் வாழ்ந்த மக்கள் தமது காலச் செய்திகளை கற்களிலும் செப்புத் தகடுகளிலும் இன்னும் பல பொருட்களிலும் எழுதி வைத்தனர். அவை பிற்காலத்தில் ஒரு ஆவணமாகக் கருதப்படும் என்று அவர்கள் எண்ணியிருக்கவில்லை. இத்தகைய சாசனங்கள் உலகம் பூராகவும் பரவிக் கிடக்கின்றது. அந்தவகையில் மட்டக்களப்பு தேசத்தில் பிராமிக் கல்வெட்டுக்கள், மத்திய காலக் கோயிற் கல்வெட்டுக்கள் என அதிகமானவை உள்ளன. இவற்றில் பிராமிக் கல்வெட்டுக்கள் மாத்திரம் இவ்வாய்விற்குட்படுத்தப்படுகின்றன.
இலங்கைத் தமிழர் பூர்வீக காலம் முதலாக செறிந்து வாழ்ந்த பிரதானமான நிலப்பகுதிகளில் மட்டக்களப்பு தேசமும் ஒன்றாகும். இங்கு மட்டக்களப்பு தேசம் என நாம் குறிப்பிடுவது கிழக்கிலங்கையில் வடக்கே வெருகலாற்றையும் தெற்கே குமுக்கன் நதியையும் எல்லைகளாகக் கொண்ட தற்போதைய மட்டக்களப்பு, அம்பாறை எனும் இரு மாவட்டப் பிரிவுகளையுமேயாகும். 1962ம் ஆண்டு இந்நிலப்பரப்பு மட்டக்களப்பு, அம்பாறை எனும் இரு நிருவாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. ஆயினும் பூர்வீக காலத்தைக் கருத்திற் கொண்டு பழைய மட்டக்களப்பின் அனைத்துப் பகுதிகளையும் இவ்வாய்வு உள்ளடக்கியுள்ளது.
இலங்கையின் ஆரம்ப கால வரலாறானது ஐதிகங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. எனினும் தொல்லியலில் ஏற்பட்ட வளர்ச்சி இந்நிலையில் மாற்றங்களை உண்டுபண்ணி ஆதாரங்களுடனான வரலாற்றைக் கட்டியெழுப்பியுள்ளது. அந்தவகையில் கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலம் முதலாக ஈழத்தில் எழுத்தறிவுமிக்க மனித சமுதாயமொன்று வாழ்ந்தமைக்கு இங்கு கிடைக்கின்ற சாசனங்களே சான்றாகின்றன.
கல்வெட்டுக்கள் பல வகைப்படும். சில கல்வெட்டுக்கள் நீளமாக, அதிக விவரங்களை உள்ளடக்கியுள்ள அதேநேரம் சில குறிப்பாக பிராமிச் சாசனங்கள் மிகச்சிறியனவாகக் காணப்படுகின்றன. இவை யாவற்றிலும் பொதுவாக அரசன் முதலான உயர்நிலையில் உள்ளோரும், சமூகத்தின் ஏனைய நிலைகளில் உள்ளோரும் வழங்கிய தானங்கள் தொடர்பான செய்தியைப் பதிவு செய்கின்றன. எனினும் இவற்றிலிருந்து அக்கால அரசியல், பொருளாதாரம், சமூகம், சமயம், மொழி, எழுத்து வளர்ச்சி முதலான பல்வேறு விடயங்களையும் தெரிந்து கொள்ள முடிகின்றது. எனவே ஒரு தேசத்தின் வரலாற்றை வெளிக் கொண்டு வருவதில் கல்வெட்டுக்களின் பங்கு மிக முக்கியமானதாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுக்கள் தொடர்பான ஆய்வு காலத்தின் தேவையாக
உள்ளது. மட்டக்களப்பில் காணப்படுகின்ற இக்கல்வெட்டுக்களில் வழங்கப்பட்ட தானப் பொருள், தானம் பெற்றோர், தானம் வழங்கியோர் பற்றிய ஆய்வாக இது அமைகின்றது.
மனிதப் பண்பினை உயர்த்தும் ஒரு நெறி ஈகை. பிறருக்குக் கொடுத்து மகிழும் மனம் பெற்றால் மனிதன் பக்குவம் அடைந்து விடுகின்றான். போட்டியும் பொறாமையும் அடுத்தவர் பொருளைக் கவரும் எண்ணமும் மனிதனை மிருக நிலைக்குக் கொண்டு செல்லும் குணங்களாகும். வள்ளுவர் கொடை பற்றிக் குறிப்பிடுகின்றவிடத்து
'ஈதல் இசைபட வாழ்தல்;;; அதுவல்ல
ஊதியம் இல்லை உயிர்க்கு' என்கின்றார். அந்தவகையில் புராதன காலம் முதல் மனிதன் தானம் செய்யும் பண்புடையவனாகக் காணப்படுகின்றான்.