Abstract:
இலங்கையின் பூர்வீக வரலாறானது ஆரம்பத்தில் மகாவம்சம் முதலான இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே வெளிப்படுத்தப்பட்டது. எனினும் தொல்லியலில் ஏற்பட்ட வளர்ச்சி இந்நிலையில் மாற்றங்களை உண்டுபண்ணி ஆதாரங்களுடனான வரலாற்றைக் கட்டியெழுப்பியுள்ளது. ஆயினும் கிழக்கிலங்கையில் ஆய்விற்கு உட்படுத்தப்படாது பல இடங்கள் காணப்படுகின்ற அதேநேரம், இதுவரை அடையாளங் காணப்படாத வரலாற்றுத் தொன்மைமிக்க பிரதேசங்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் முருக்கன்தீவு எனுமிடத்தின் வரலாற்றுத் தொன்மையை வெளிப்படுத்துவதாக இவ்வாய்வு அமைகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கோரளைப்பற்று தெற்குப் பிரதேசத்திற்குட்பட்ட கிராமமான முருக்கன் தீவுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மேலாய்வொன்றில் சில தொல்லியல் எச்சங்களை அடையாளங் காணமுடிந்தது. இவ்வெச்சங்களின் தொன்மையை ஆய்வு செய்து வெளிப்படுத்துவதன் ஊடாக பிராந்தியத்தின் தொன்மையை ஆதாரத்துடன் தெளிவுபடுத்தல் இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். பிராமிச் சாசனம் பொறிக்கப்பட்ட கற்பலகை, நடுகற்கள், மட்குடம், சிவப்பு நிற மட்பாண்ட ஓடுகள், சிப்பிகள், சங்குகள் போன்றன முருக்கன்தீவில் கிடைத்தமை வரலாற்றுக் காலத்தின் முற்பகுதியில், அதாவது கி.பி முதலாம் நூற்றாண்டுகளில் இங்கு நாகரிகமிக்க மக்கள் வாழ்க்கை காணப்பட்டுள்ளது என்பதற்கு சிறந்த சான்றாக அமைகின்றன. ஆயினும் அதனை உறுதிசெய்வதற்கு மேலும் பல ஆதாரங்கள் எமக்குத் தேவைப்படுகின்றன. இப்பகுதியானது முழுமையான தொல்லியல் அகழ்வாய்விற்கு உட்படுத்தப்பட வேண்டியது இன்றியமையாததாகும். அவ்வாறு ஆய்வு மேற்கொள்ளப்படுவதனூடாக இப்பிராந்தியத்தின் வரலாறு மட்டுமின்றி மட்டக்களப்பு தேசத்தின் வரலாறும் ஆதாரத்துடன் வெளிக்கொண்டுவரப்படும். இது மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் முதலான இலக்கியங்களுடன் இணைந்து மட்டக்களப்பு பிராந்தியத்தின் ஆதாரபூர்வமான வரலாற்றைத் தெளிவாக்கும் என்பதில் எவ்வித கருத்து வேறுபாடுமில்லை.