Abstract:
இலங்கையின் வட கிழக்குப் பகுதிகள் நாட்டின் ஏனைய பகுதிகளைப் போல தனித்துவமான வரலாற்றைக் கொண்டவையாக வளர்ச்சியடைந்து வந்தமைக்குச் சமகாலத்தில் கிடைக்கின்ற வரலாற்று மூலாதாரங்கள் சான்றாக அமைகின்றன. இலங்கையின் பூர்வீக குடிகளாக இயக்கர், நாகர் வாழ்ந்தமைக்கு மகாவம்சம் முதலான பாளி இலக்கியங்களும், பிராமிச் சாசனங்கள் முதலான தொல்லியற் சான்றுகளும் ஆதாரங்களாக அமைகின்றன. மட்டக்களப்புத் தேசத்தைப் பொறுத்தவரையில் இக்குடிகள் பற்றிய ஆய்வுகள் முக்கியத்துவமுடையதாக அமைகின்றது. நாகர்களது செல்வாக்கு பொதுவாக வட இலங்கையை மையப்படுத்தியதாகவே அமைந்திருந்தது என ஆரம்ப காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் வெளிப்படுத்தின. ஆயினும் கிழக்கில் நாகர் வாழ்ந்தமைக்கான சான்றுகள் பல அண்மைக் காலம் வரை கண்டறியப்பட்டு வருகின்றமை அவர்கள் பற்றிய ஆய்வை ஆழப்படுத்துவதற்கான சூழலை உருவாக்கியுள்ளன.
'நாக' என்ற சொற்பிரயோகம் தொலமியினுடைய ஜியோகிறோபியா (நாக தீபோய்), சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான தமிழிலக்கியங்கள் முதலானவற்றிலும் காணப்படுகின்றது. அதேபோன்று நாட்டின் பல பாகங்களிலும் கண்டறியப்பட்டுள்ள பிராமிக் கல்வெட்டுக்களில் ஏறத்தாழ 90 இல் நாகர்களுடன் தொடர்புடைய ஆட்பெயர்கள், இடப்பெயர்கள் என்பனவும் காணப்படுகின்றன. கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்திற்குரியதான இக்கல்வெட்டுக்கள் இலங்கைக்கும் நாகருக்குமிடையிலான தொடர்புகளை வெளிப்படுத்துகின்றது. பேராசிரியர் பரணவிதான ஆரம்பத்தில் இயக்கர், நாகர் என்போர் மனிதப்பிறவியற்ற அமானுஸ்யர்கள் எனக் கருதினார். வட இந்தியாவிலிருந்து வந்த விஜயனின் வழிவந்தவர்களாகக் கருதப்படும் சிங்களவர்களே இலங்கையின் பூர்வீக குடிகள் எனக் காட்டும் முயற்சியாகவே அவர் இத்தகைய கருத்தை முன்வைத்தார். ஆயினும் வட இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் நாகரை மனிதர்களாக அடையாளங் காட்டின.
'நாக' என்ற பெயர் ஆதி காலம் தொடக்கம் வழக்கிலிருந்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், சமய வழிபாட்டில் நாக பாம்பை குல மரபுச் சின்னமாகக் கொண்டிருந்ததே காரணம் என்ற விளக்கமே முக்கியத்துவமுடையதாகும். இப்பெயர் ஆதிகால இலங்கையில் பல இன, பல மொழி பேசும் மக்களோடு தொடர்புடைய ஆட்பெயராகவும், குலப் பெயராகவும் இருந்ததற்கு பொருத்தமான சான்றுகள் காணப்படுகின்றன. ஏனைய இன மக்களிடம் இப்பெயர் மறைந்து போய்விட்டதாயினும், தமிழரிடையே இன்றுவரை நிலைபெற்றுள்ளமை குறிப்;பிடத்தக்கது.1இலங்கையின் வரலாற்று இலக்கியங்களுள் ஒன்றான மகாவம்சம் கி.மு ஆறாம் நூற்றாண்டில் புத்தர் இலங்கை வந்தபோது அனுராதபுரத்திற்கு வடக்கில் அமைந்த பிராந்தியத்தை 'நாக தீப(ம்)' எனவும், அங்கு ஆட்சியிலிருந்த இரு நாகவம்சத்து மன்னர்களுக்கிடையிலான சிம்மாசனப் போராட்டத்தைத் தீர்த்து வைத்ததாகவும் கூறுகின்றது.2இந்நூலில் புத்தர் இலங்கை வந்ததாகக் கூறுவது ஐதிகமாக இருப்பினும் அந்நூல் எழுதப்பட்டதாகக் கருதப்படும் கி.பி ஆறாம் நூற்றாண்டில் வட இலங்கை நாக தீபம் என அழைக்கப்பட்டதையும், அங்கு நாக வம்சத்து மன்னர்களே ஆட்சி செய்தனர் என்பதையும் இச்செய்தி உறுதிப்படுத்;துகின்றது. இவ்வாறு நாகர் தொடர்பான செய்திகளை மகாவம்சம் வெளிப்படுத்துகின்றது.