Abstract:
கி.மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து அனுராதபுரம் சிறப்பான அரசியல் மையமாக விளங்கிய போதும் அதற்கு தெற்கிலும், வடக்கிலும் இனக்குழு நிலையிலிருந்து அரசு தோன்றுவதற்கு இடைக்கட்டமாக குருசில்கள், நிலக்குழுத் தலைவர்கள், குறுநில மன்னர்கள், சிற்றரசர் என்போரது ஆட்சி நடைபெற்றதை பாளி இலக்கியங்கள், பிராமிக் கல்வெட்டுக்கள், நாணயங்கள் என்பன உறுதிப்படுத்துகின்றன. அந்தவகையில் இவ்வாய்வானது கிழக்கிலங்கையில் கண்டறியப்பட்டுள்ள பிராமிக் கல்வெட்டுக்களைச் சான்றாகக் கொண்டு, அனுராதபுர அரசு நிலைபெற்றிருந்த சமகாலத்தில் கிழக்கிலங்கையானது கதிர்காமச் சத்திரியர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்கின்ற உண்மையை உறுதிப்படுத்துவதாக அமைகின்றது.இங்குள்ள பிராமிக் கல்வெட்டுக்களின் படிகள், நிழற்படங்கள் என்பவை ஆய்விற்குட்படுத்துவதுடன், தெளிவற்றதும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கருதப்படுகின்ற கல்வெட்டுக்கள் நேரடியான களவாய்விற்கு உட்படுத்தப்பட்டு, பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் பெறப்படவுள்ளன. அத்துடன் இவ்வாய்வுடன் தொடர்புடைய முன்னைய ஆய்வுகளுடன் ஒப்பிட்டு கருத்தைச் சீரமைக்கின்ற ஒப்பீட்டாய்வு அணுகுமுறையும் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வம்சத்தவரின் ஏழு தலைமுறையினர் (பரம்பரைகள்) கிழக்குப் பிராந்தியத்தில் எவ்வித தலையீடுமின்றி அரசாட்சி நடத்தியமைக்கும், அவர்களது கிளைமரபினரின் ஆட்சி கிழக்கின் சில பிராந்தியங்களில் காணப்பட்டது என்பதற்கும் பிராமிக் கல்வெட்டுக்கள் சிறந்த சான்றாக அமைகின்றன. அதாவது மூத்தோர் வம்சம், இளையோர் வம்சம் என்றவாறு இவர்களது ஆட்சிப் பரப்பு பாகுபடுத்தப்பட்டிருந்தது. இவர்களது ஆட்சி மாணிக்க கங்கை மற்றும் கும்புக்கன் ஓயா பகுதிகளை மையப்படுத்தியிருந்ததுடன், இவற்றின் வடக்கே மட்டக்களப்பை அண்மித்த முந்தனை ஆற்றுப் பகுதிவரை நடைபெற்றுள்ளது என்று கருதத்தக்கவகையில் பிராமிக் கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. மஜிம ராஜ வழிவந்த இச்சத்திரிய குலத்தோரால்; 17 குகைத் தானங்கள் வழங்கப்பட்டமையானது, இவர்களது வளத்தையும், செல்வாக்கையும் வெளிப்படுத்துகின்றது. அத்துடன் பௌத்த சங்கத்திற்கு இவர்களின் பேராதரவு காணப்;பட்டதுடன் தமது நன்கொடைகளை கல்வெட்டுக்களில் எழுதுவதற்கு நடவடிக்கை எடுத்தமை, அவர்களது பரம்பரை பற்றிய விபரங்களை வெளிப்படுத்தியமை போன்றவை சமய ஆர்வத்தை தவிர தமது கௌரவத்தினை வெளிப்படுத்தும் உந்துதலாகவே அமைந்துள்ளது எனலாம்.