dc.description.abstract |
இன்றைய கல்வி உலகில் அறிவியல் சிந்தனைகள் நாளுக்கு நாள் பெருகிவருகின்றன. இவ்வாறான நிலையில் பரந்தும் விரிந்தும் வியாபித்தும் வருகின்ற அறிவைப் பெறும் வாயில்களில் பிரதானமானது கல்வியாகும். மனிதன் தன்னை நிறை மனிதனாக உருவாக்கிக் கொள்ளும் சாதனங்களுள் கல்வி முதன்மையானது. சமூகங்களின் வரலாறுகள் மறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வரும் இன்றைய சூழலில் ஒவ்வொருவரும் தமது வரலாற்றைக் கண்டறிய வேண்டிய தேவை உள்ளது. காலம் நவீனத்துவத்தை நோக்கி நகர்கின்ற போதிலும் ஒவ்வொரு தேசத்து மக்களும் தங்களுக்கென்றுள்ள தனித்துவமான வரலாற்றைத் தேடிய பயணத்தை தொடர்ந்து கொண்டேயுள்ளனர். இதன் மூலமாகவே சமூகத்தின் பலதரப்பட்டவர்களுக்கும் வரலாறு கொண்டு செல்லப்படும். இந்த வரலாற்றுணர்வு இத்தேசத்து பூர்வீக மக்கள் நாம் என்று பெருமையுடன் கூற ஏதுவாக அமையும்.
'வரலாறென்பது செத்துப்போன காலத்தின் புதைகுழிக்குள் உக்கிப்போன எலும்புகளைத் தேடுவதல்ல. கடந்துபோன நிகழ்வுகளை காலவரிசையில் நிரைப்படுத்திவிடுவதும் வரலாறாகிவிடாது. வரலாறு என்பது மனித சமூக வாழ்வியக்கம் பற்றியது. அந்த அசைவியக்கத்திற்கும் மாற்றத்திற்கும் உந்தியல்பான தன்மைகன், சக்திகள், விதிகள் பற்றியது.'1 இத்தகைய வரலாற்றுணர்வு அனைவர் மத்தியிலும் ஏற்படுவதற்குத் தூண்டுதலாக அமைய வேண்டியது பாடசாலைக் கல்வித் திட்டமாகும். இந்நிலையில் மட்டக்களப்பைப் பொறுத்தவரையில் வரலாறு பாடம் தொடர்பான விழிப்புணர்வு இன்றியமையாததாகும்.
அண்மைக்கால கல்வியியல் ஆய்வுகளில் கல்வி அடைவு மட்டம் மற்றும் கல்வி தொடர்பான தேர்ச்சியில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. எந்தவொரு ஒழுங்கமைப்பினதும் முக்கியநோக்கு அடைவுமட்டமாகும். பாடசாலைக் கல்விச் செயற்பாடுகளின் வெளியீடு அதன் அடைவு மட்டமாகும். இது பாடசாலையின் வெற்றிகரமான இயக்கத்தையும் பாடசாலை வினைத்திறனையும் வெளிப்படுத்தி உறுதிசெய்து சான்றுபடுத்துகின்ற பிரதான குறிகாட்டியாக அமைகின்றது. அந்தவகையில் வரலாறு பாட அடைவு மட்டம் ஆய்விற்குட்படுத்தப்பட வேண்டியது அவசியமாக உள்ளது.
பாடசாலைக் கல்வியில் வரலாறு 2009 ஆம் ஆண்டு தொடக்கம், தரம் -6 முதல் தரம் -11 வரையான இடைநிலைக் கல்வித் திட்டத்தில் கட்டாயப்பாடமாக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் 'சமூகக்கல்வியும் வரலாறும்' எனும் கட்டாயப் பாடமாகவும், வரலாறு விருப்பத்திற்குரிய தெரிவுப் பாடமாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி உயர்தரத்தில் கலைப்பிரிவில் ஒரு பாடமாகவும் வரலாறு காணப்படுகின்றது. மதிப்பிற்குரிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் அண்மைய பேச்சொன்றில்(02.05.2014) தமிழ், சிங்கள மொழிகளுடன் வரலாறு பாடமும் முறையாக சிறு பராயம் முதல் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தமை சிறப்பானது. எனவே இப்பாடமும் அது தொடர்பான ஆய்வும் அவசியமானதாகும். அந்தவகையில் எமது சமூகத்தில் வரலாறு பாடத்தின் நிலை எத்தகையாதாகவுள்ளது என்பதைக் கண்டறிய வேண்டியது காலத்தின் தேவையாகும். அந்நிலையைக் கண்டறிந்து, அதற்கான காரணங்களை இனங்காண்பதோடு, அவற்றை நிவர்த்தி செய்வதற்கான விதப்புரைகளை முன்வைப்பதாகவும் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. |
en_US |