| dc.description.abstract | மனித வாழ்வை மேம்படுத்துவதற்கென வகுக்கப்பட்ட ஒழுக்க விதிமுறைகளின் 
தொகுப்பாக அறம் அமைகிறது. அறமென்ற இச்சொல் நீதி, ஒழுக்கம், வழக்கம், 
கடமை, புண்ணியம், ஈகை, அறக்கடவுள், சமயம் என்ற பல்வேறு பொருள்களில் 
கையாளப்பட்டுள்ளது. சங்கச் செய்யுட்கள் முதல் நவீன இலக்கியங்கள் ஈறாக 
அறமும் அதன் வழி அதிகாரத்துவமும் வலுவான செல்வாக்கைச் செலுத்தி 
வந்திருப்பதைக் காணமுடியும். சமூக அசைவியக்கத்தில் கட்டுப்பாடுகளும் 
ஒழுங்கமைப்புகளும் விதிக்கப்பட்டு வந்துள்ளமையை இது காட்டுகின்றது. 'அறம் 
வலியுறுத்தல்' மனித நிலைப்படுத்தலுக்குரிய கருவியாக கையாளப்பட்டுள்ளது வெவ்வேறு 
 அடிப்படைகளில் ஒவ்வொரு கால கட்டத்தின் சமூக, அரசியல் 
சூழ்நிலைகளும் இதற்கு ஏதுவாக அமைந்துள்ளன. 
காதலையும் வீரத்தையும் முதன்மையான பொருட்கோடலாகக் கொண்ட சங்கச் 
செய்யுட்களிலும் அறத்தை, நீதியை வலியுத்தும் கருத்துக்கள் செறிந்து 
காணப்படுகின்றன. அரச அறமும், அரச அதிகாரமும், சமூக நீதியும் 
வலியுறுத்தப்படவேண்டிய தேவை அக்காலத்தில் இருந்துள்ளது. சங்க காலத்திலிருந்து 
மாறுபட்ட அரசியல், சமூக, சமயச் சூழ்நிலை சங்கமருவிய காலத்தில் 
உண்டானபோது முன்னரைவிடவும் சமூக மேன்னிலையாக்கதிற்கு அறம் வலியுத்தலின் 
அவசியம் உணரப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இக்காலத்தில் 
அறக்கருத்துக்களை வலியுறுத்துகின்ற நூல்கள் எழுந்துள்ளன. பதினெண் 
கீழ்க்கணக்கு நூல்களில் பதினொன்றும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய 
காப்பியங்களும் அறத்தையே பிரதானப்படுத்துவனவாக ஆக்கப்பட்டுள்ளமையைக் 
காணலாம். இக்கட்டுரை பூதஞ்சேந்தனாரால் பாடப்பட்ட - பதினெண் கீழ்க்கணக்கு 
நூல்களுள் ஒன்றாக அமையும் இனியவை நாற்பது என்ற நூலில் 
வலியுறுத்தப்பட்டுள்ள அறக்கருத்துக்களையும் அவற்றின் அதிகார 
நிலைப்படுத்தலையும் எடுத்துக் கூறுவதாக அமைகின்றது. | en_US |