Abstract:
நவநாகரிக யுகத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமானது துரிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க மறுபுறம் இணையப் பாவனையானது சமூகத்தின் மத்தியில் இன்றியமையாததாக காணப்படுகின்றது. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினை இணையத்தின் வாயிலாக பாவிக்கின்ற போது ஏற்படுகின்ற ஒரு பெரும் பாதகமான விளைவாகவே இணையவழிக் குற்றங்கள் கருதப்படுகின்றன. புதியவகை பிரச்சினையாக உருவெடுத்துள்ள இணையவழிக் குற்றங்கள் பற்றிய ஆய்வாகவே இவ்வாய்வானது அமையப் பெற்றுள்ளது. அந்தவகையில் இணையவழிக் குற்றங்களிற்கு அடிப்படையாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான அபரிமிதமான வளர்ச்சிதான் காரணமாகின்றது என்பதனையும் இதன்வழியாக சமூகத்தில் ஏற்படுத்தப்படுகின்ற ஒழுக்கமீறுகைகளைக் கண்டறிவதையும் நோக்கமாக இவ்வாய்வு கொண்டுள்ளது. கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்தான் இணையவழிக் குற்றங்களுக்கு அடிநாதமாக அமைகின்றது எனும் முடிவுக்கு வர முடிகின்றது. இதன் அடிப்படையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துகின்ற பயனர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நுட்பமுறைகள், கொள்கை மற்றும் திட்டமிடுதல் சார்ந்தோர்கள் பின்பற்ற வேண்டிய நியதிகள், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வடிவமைப்பாளர்கள் எதிர்காலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் போன்ற பரிந்துரைகளையும் இவ்வாய்வானது வெளிப்படுத்துகின்றது