Abstract:
வாசிப்புத் திறன் பின்னடைவால் கனிஸ்ட இடைநிலை வகுப்பு மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர். அத்தகைய இடங்களைக் கண்டறிந்து அதற்கான சிபார்சுகளை முன்வைத்தல் என்ற நோக்கத்தில் அமைந்த இவ்வாய்வானது, ஏறாவூர் கல்வி கோட்டப் பாடசாலைகளில் உள்ள கனிஸ்ட இடைநிலை வகுப்பு மாணவர்களை உள்ளடக்கிய பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் அளவை நிலை ஆய்வாகும். கனிஸ்ட இடைநிலை வகுப்பு மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டமையினால் ஏறாவூர் கல்விக் கோட்டத்திலுள்ள 18 பாடசாலைகளிலிருந்து கனிஸ்ட இடைநிலை வகுப்புக்களைக் கொண்ட 10 பாடசாலைகளும் நோக்க மாதிரியின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டன. 10 பாடசாலைகளிலும் உள்ள அதிபர் தரத்தை உடைய 12 அதிபர்கள் நோக்க மாதிரியின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டதுடன் கனிஸ்ட இடைநிலை வகுப்புக் கற்பிக்கும் 108 ஆசிரியர்களிலிருந்து ஆண், பெண் என்ற ரீதியில் படையாக்கப்பட்டு பின் இலகு எழுமாற்று மாதிரியின் அடிப்படையில் 21 எனும் விகிதாசாரத்தின் அடிப்படையில் 54 ஆசிரியர்களும் தெரிவுசெய்யப்பட்டதுடன் 10 பாடசாலைகளின் அறிக்கைகளில் இருந்தும் பெறப்பட்ட வாசிப்புத்திறன் பின்னடைந்த 228 மாணவர்களிலிருந்து ஆண், பெண் என்ற ரீதியில் படையாக்கப்பட்டு பின் இலகு எழுமாற்று மாதிரியின் அடிப்படையில் 2:1 எனும் விகிதாசாரத்தின் அடிப்படையில் 105 மாணவர்களும் ஆய்வு மாதிரியாக தெரிவு செய்யப்பட்டனர். மேலும் மாதிரியாகத் தெரிவு செய்யப்பட்ட 105 மாணவர்களின் 5.1 விகிதத்தில் 20 பெற்றோர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். தெரிவுசெய்யப்பட்ட மாதிரிகளிடமிருந்து வினாக்கொத்து, நேர்காணல், அவதானம், ஆவணச்சான்றுகள் போன்ற ஆய்வுக்கருவிகள் மூலம் தரவுகள் பெறப்பட்டன. பண்புரீதியாகவும், அளவுரீதியாகவும் பெறப்பட்ட தரவுகள் அனைத்தும் Excel மென்பொருளினூடாக பகுப்பாய்வு செய்யப்பட்டு அட்டவணைகள், வரைபுகள் மூலம் குறித்துக்காட்டப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து முடிவுகள் பெறப்பட்டன. வாசிப்புத்திறன் பின்னடைவால் கற்றல் செயற்பாட்டில் சுயமாக வாசிக்க முடியாமை, பரீட்சை வினாக்கள் மற்றும் பயிற்சிக் கொப்பிகளிலுள்ள வினாக்களை வாசித்து விளங்கி விடையளிக்க முடியாமை, இணைப்பாடவிதான செயற்பாடுகளில் கலந்துகொள்ள முடியாமை, தமிழ்த்தினப் போட்டி நிகழ்வின் போது போட்டிகளில் கலந்து கொள்ள முன்வராமை, போன்ற பல்வேறு சவால்கள் ஏற்படுகின்றன. எனவே. இம்மாணவர்களின் வாசிப்புத்திறனை விருத்தி செய்யும் வகையில் பாடசாலையில் பரிகார செயற்பாடுகள் மேற்கொள்ளல், ஊக்கப்படுத்தல் செயற்பாடுகள், வாசிப்பு பயிற்சியின் போது புதிய கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தல், பாடசாலையில் வாசிப்புத்திறனை வளர்ப்பதற்கான தனியான குழு அமைத்தல், வாசிப்புத்திறனை வளர்ப்பதற்கான விசேட பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்படல் போன்ற தீர்வுகளை முன்வைக்கக் கூடிய வகையில் அதற்கான விதப்புரைகளும் முன்மொழியப்பட்டுள்ளன.