Abstract:
இன்றைய நவீன யுகத்தில் ஏற்படுகின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு உலகில் ஏற்பட்ட தொழிநுட்பப் புரட்சியும் மிக முக்கிய காரணமாகவுள்ளது. இன்று எம்மால் மேற்கொள்ளப்படுகின்ற அனேகமான செயற்பாடுகளில் தொழிநுட்ப சாதனங்களின் பங்களிப்பு இன்றியமையாததாக காணப்படுகின்றது. இதனடிப்படையில் சமீபகாலங்களில் உலகையே ஆட்டிப்படைத்த covid-19 பெருந்தொற்றினால் அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்நிலைக் கல்வியின் மாணவர்கள் தங்களது கற்றல் செயற்பாடுகளை தொலைத்தொடர்பு சாதனங்களின் வாயிலாக முன்னெடுத்துச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் விளைவினால் மாணவர்கள் நாகரிகம் எனும் அநாகரிக மாயைக்குள் தெரிந்தும் தெரியாமலும் விழுந்து. ஒழுக்க விழுமியங்களை புறந்தள்ளிவிடுவதனால் பல்வேறு வகையிலும் ஒழுக்க ரீதியான சவால்களை எதிர்நோக்கியுள்ளனர். அந்தவகையில் நிகழ்நிலைக் கல்வியினூடாக மாணவர்களிடத்தில் அதிகரித்த சமூக வலைத்தளப் பாவனை அவர்களை எவ்வாறான ஒழுக்க மீறுகைகளுக்கு ஆளாக்கியுள்ளது என்பதை கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வானது ஆய்வு பிரதேசமாக கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட தெஹியோவிட்ட கோட்டத்திலுள்ள 9 தமிழ் பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. நோக்க மாதிரியைக் கொண்டு சிரேஷ்ட இடைநிலை பிரிவு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாய்விற்காக கவனக் குழு நேர்காணல், விணக்கொத்து மற்றம் அவதானம் ஆகிய ஆய்வு முறைகள் பயன்படுத்தப்பட்டன. அந்தவகையில் ஆய்வு முடிவுகளிலிருந்து, அதிகமான மாணவர்கள் நிகழ்நிலைக் கல்வியினூடாக அதிகரித்த சமூக வலைத்தளங்களின் பாவனையால் பல்வேறு ஒழுக்க மீறுகைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் பாதிப்படையும் கற்றலையும் எதிர்காலத்தையும் வளப்படுத்த சமூக வலைத்தளங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பிள்ளை மீது கொண்டிருக்க வேண்டிய இடைத்தொடர்புகள் போன்றவற்றுக்கான சிபார்சுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன