Abstract:
இவ்வாய்வானது விசேட தேவையுடைய மாணவர்கள் கற்றலில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்காண்பதுடன் அவர்களது கற்றலில் ஆசிரியர்களின் வகிபங்கினை ஆராய்தல் எனும் நோக்கத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு மேற்கு மற்றும் கல்குடா கல்வி வலயங்களில் உள்ள விசேட கல்வி அலகுகளை அடிப்படையாகக் கொண்ட அளவை நிலை ஆய்வாக அமைந்தது. இவ்வலயங்களில் உள்ள விசேட தேவையுடைய மாணவர்களுக்கான விசேட அலகுகளைக் கொண்ட 09 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன. 09 பாடசாலைகளிலும் இருந்து 09 அதிபர்களும், விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்பிக்கும். 20 ஆசிரியர்களும், இவ்விரண்டு வலயங்களிலும் உள்ள விசேட கல்விக்கு பொறுப்பான 02 சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களும், விசேட தேவையுடைய 90 மாணவர்களும், இம்மாணவர்களின் பெற்றோர்கள் 90 பேரும். நோக்க மாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு வினாக்கொத்து, அவதானம், நேர்முகங்காணல் போன்ற ஆய்வு கருவிகள் மூலம் தரவுகள் பெறப்பட்டு அவை ஆய்வு நோக்கத்தின் அடிப்படையில் பண்பு ரீதியானதும், அளவு ரீதியானதுமான கலப்பு முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டு தரவுகள் MS EXCEL மூலம் உருக்கள், அட்டவணைகளாக வகை குறித்துக்காட்டப்பட்டுள்ளன. அதன் இந்த கலப்பு முறை பகுப்பாய்வின் அடிப்படையில் விசேட தேவையுடைய மாணவர்களின் கற்றலில் ஆசிரியர்களின் வகிபாகம் குறைவதற்கான காரணங்களாக போதிய பயிற்சி குறைவு, வளங்கள் குறைவாக காணப்படுகின்றமை, ஆசிரியர்கள் வாண்மைத்துவத்தை விருத்தி செய்யாமை, இம்மாணவர்களின் பெற்றோர் ஆசிரியர்களின் கற்றல், கற்பித்தலுக்கு போதிய பங்களிப்பு வழங்காமை, ஆசிரியர்கள் தூர பிரதேசங்களில் இருந்து பணிக்கு வருகின்றமை, பெற்றோர் பிள்ளைகளை தொடர்ச்சியாக பாடசாலைக்கு அனுப்பாமை, ஆசிரியர் மாணவர் விகிதம் முறையாக பின்பற்றப்படாமை போன்ற பல காரணங்களால் இம்மாணவர்களின் கற்றலில் ஆசிரியர்களின் வகிபாகம் குறைகின்றமை பிரச்சினைகளாக பெறப்பட்டுள்ளன. இதற்கான தீர்வுகளாக அதிபர்கள் ஆசிரியர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்குதல், ஆசிரியர்கள் விசேட கல்வி தொடர்பான கற்கை நெறிகளை தொடர்வதற்கு அதிபர் ஒத்துழைப்பு வழங்குதல். விசேட தேவைக் கல்வியுடன் தொடர்புபட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்களை அழைத்து ஆசிரியர்களுக்கு செயலமர்வுகள் நடாத்துதல், கல்வி அமைச்சு வலய மட்டத்தில் இவ்ஆசிரியர்களுக்கு பயிற்சி நெறிகளை வழங்குதல், அதிபர் இம்மாணவர்களின் கற்றல், கற்பித்தல் தொடர்பில் பெற்றோருக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கி ஆசிரியர்களுடன் ஒத்துழைப்புடன் செயற்பட வைத்தல், விசேட தேவை அலகுகளில் கல்விசாரா ஊழியர்களை நியமித்தல், இவ்ஆசிரியர்களுக்கு உதவி ஆசிரியர்களை நியமித்தல், கல்வி அமைச்சின் 37/2020 சுற்றறிக்கையின் படி விசேட அலகுகளில் ஆசிரியர் மாணவர் விகிதாசாரம் 1:5 என கணக்கிட்டு தேவையான மீதி ஆசிரியர்களை வழங்க வேண்டும். மற்றும் மாணவர்களின் வீட்டிற்கு செல்லும் ஆசிரியர்களின் பொருத்தமான எண்ணிக்கையை கணக்கிடும்போது ஆசிரியர் மாணவர் விகிதம் 1:3 ஆக இருத்தல் வேண்டும், அதிபர் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்து வளங்களை பெற்றுக்கொடுத்தல், ஆசிரிய ஆலோசகர் மேற்பார்வை செய்தல் போன்ற செயற்பாடுகள் விதந்துரைக்கப்பட்டுள்ளது