Abstract:
உலகில் அதிகரித்துச் செல்லும் முதியோர் சனத்தொகையைக் கொண்ட நாடாக இலங்கை காணப்படுகின்றது. அதிகரித்துச் செல்லும் முதியோர் சனத்தொகையானது சுகாதாரம், சமூக நலன்புரி மற்றும் குடும்ப ஆதரவு என்பனவற்றில் எதிர்மறை விளைவுகளைத் தோற்றுவிக்கின்றது. முதியோர்கள் எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்சினைகளை மதிப்பீடுதலே ஆய்வின் பிரதான நோக்கமாகும். நுவரெலியா பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பெருந்தோட்டங்களை அடிப்படையாக கொண்ட இந்த ஆய்வில் கலப்பு முறை ஆய்வு வடிவம் பயன்படுத்தப்பட்டது. வினாக்கொத்து, வீடய ஆய்வு, நேர்காணல் மற்றும் இலக்குக் குழுக்கலந்துரையாடல் மூலம் முதலாம் நிலைத்தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அடுக்கமைக்கப்பட்ட எழுமாற்று மாதிரியின் அடிப்படையில் 60 மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 427 முதியோர்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். ஆய்வின் அனைத்துச் செயன் முறைகளிலும் ஆய்வு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன. பண்புசார் தரவுகள் கருப்பொருள் பகுப்பாய்விற்கும் கணியம்சார் தரவுகள் SPSS (version23) உதவியுடன் விபரணப் புள்ளிவிபரவியல் பகுப்பாவிற்கும் உட்படுத்தப்பட்டதுடன் மாறிகளுக்கிடையிலான தொடர்பினை விபரிப்பதற்கு கைவர்க்கச் சோதனையும் (Chi-square test) பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகளின்படி 88.1% முதியோர்கள் இன்றும் லயன் குடியிருப்புகளில் வாழ்வதுடன் 74.2% மாணவர்கள் தற்போது தொழில்புரிகின்றனர். அனைத்து முதியோர்களும் உடல் ஆரோக்கியப் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். இவர்களில் 95.6% மானவர்கள் கால்வலியாலும் 13.3% மானோர் இருதய நோய்களாலும் பாதிக்கப்பபட்டுள்ளனர். இவர்களில் 87.1% மானோர் உளவியல் ரீதியான பிரச்சினைகளினை எதிர்கொண்டுள்ளனர். இவற்றில் மறதி, மன அழுத்தம், தனிமை உணர்வு, சோர்வு, கோபம், தற்கொலை தொடர்பான எண்ணங்கள் (8.4%) முக்கிய பிரச்சினைகளாகும். மேலும், உளவியல் சார்ந்த பிரச்சினைகளை எதிர்நோக்குபவர்களில் 2.6% மானவர்கள் மாத்திரமே உளவியல் ஆலோசனைகளைப் பெற்றுள்ளனர். மேலும், 97.2% முதியோர்கள் தங்கள் தோட்டப்பகுதிகளில் மருத்துவ வசதி காணப்படவில்லை எனக் குறிப்பிட்டனர். மேலும், முதியோர்களில் 89.5% மானவர்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். ஆய்வு முடிவுகளின்படி முதியோர்கள் அதிகளவு சுகாதாரப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றனர். முதியோர்களுக்கான விசேடமான மருத்துவப் பாராமரிப்பு சேவைகளைப் பெருந்தோட்ட வைத்தியசாலைகளில் கிடைப்பதை உறுதிப்படுத்துவதன் மூலம் பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள முதியோர்கள் எதிர்நோக்குகின்ற சுகாதாரப் பிரச்சினைகளைக் குறைக்க முடியும்