dc.description.abstract |
இலக்கியங்களை வாய்மொழி, எழுத்துமொழி எனப் பிரிப்பதும், அவற்றுக்கிடையே எல்லைகளை வரையறுப்பதுமான கருத்தாக்கங்கள் தென்னாசிய, தென்கிழக்காசிய பிராந்திய இலக்கிய மரபுக்கு முற்றிலும் பொருந்துவதாக இல்லை. ஏனெனில், இப்பிரதேசங்களில் சில இலக்கியங்கள் அளிக்கை நிலையில் வழங்கி வருவதன் காரணமாக வாய்மொழி, அளிக்கை, எழுத்து மரபுகளுக்கிடையே பரஸ்பர ஊடாட்டமொன்று நிலவிவருகின்றது. எடுத்துக்காட்டாக தென்னாசிய, தென்கிழக்காசியப் பிராந்தியங்களில் இராமாயண, மகாபாரத பாரம்பரியங்கள் வாய்மொழி, அளிக்கை, எழுத்துப் பாரம்பரியம் என்ற மூன்று பாரம்பரியங்களோடு தொடர்புபட்டனவாக உள்ளன. இந்த மூன்று பாரம்பரியங்களும் அடிக்கடி ஒன்றோடு ஒன்று கலந்தவையாகவும், ஒன்று மற்றொன்றின் மீது செல்வாக்குச் செலுத்துவதாகவும் உள்ளன.இப்பிராந்தியங்களில் எழுதப்பட்ட மகாபாரத, இராமாயணக் காவியங்களின் மாற்று வடிவங்கள் நூற்றாண்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. இக்கதைகள் அளிக்கைகளின் ஊடாகவே மக்கள் மத்தியில் வாழ்கின்றன. அவர்கள் இத்தகைய காவியங்களின் எழுத்து வடிவங்களையும் அவற்றின் அளிக்கை வடிங்களையும் ஒன்றாகவே நோக்கி வந்துள்ளனர். ஆற்றுகைப் பாரம்பரியம் எழுதப்பட்ட பிரதிகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தாலும் அதிக மாற்றங்களையும் பெற்றுள்ளது. அளிக்கையாளர்கள் தமது பிரதிகளையும் பாத்திரங்களையும் தமது ரசிகர்களை நெருக்கமாகச் சென்றடைவதற்காக சமூகம் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்கின்றார்கள். எனவே, தென்னாசிய, தென்கிழக்காசிய பிராந்தியங்களில் வாய்மொழி, எழுத்து வடிவங்களுக்கு இடையே காணப்படுகின்ற இடைவினைகளும் வேறுபாடுகளும் சிக்கலான தன்மை கொண்டவை. இந்த இடைவினைகள் இத்தகைய பிரதிகளின் எல்லைகள் பேணப்படுவதற்கு கடினமானவை என்பதை உணர்த்துகின்றன. சமூக மாற்றங்கள் காரணமாக இந்த எல்லைகளுக்கு இடையே இருக்கும் வேறுபாடுகள் மறைந்தும் மாற்றங்களைப் பெற்றும் வருகின்றன என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். |
en_US |