Abstract:
பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் அச்சாணி வாக்களிப்பு ஆகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மையாகத் தமிழ் மக்களும், சிறுபான்மையாக முஸ்லீம் மக்களும் வாழ்கின்றனர். ஆயினும், அவர்களிடையே வாக்களிப்பு நடத்தையில் வித்தியாசம் காணப்படுகின்றதா? என்பதனை ஆய்வுப் பிரச்சினையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஈரினம் வாழும் இம்மாவட்டத்தில், ஓர் இனம் வாக்களிப்பு நடத்தையில் பின்தங்கி நிற்கும்போது, அது அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. ஆகையால், உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்துள்ள நிலைமையில், ஈரின மக்களிடையேயும் வாக்களிப்புத் தொடர்பில் சமாந்தரமான போக்கு காணப்படுகின்றதா? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
இவ்வாய்வானது, கலப்பு ஆய்வுமுறையியல் அணுகுமுறையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பண்பு, மற்றும் தரவுசார் தகவல்கள் முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத் தரவு மூலங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன ரீதியான வாக்களிப்பு நடத்தை தொடர்பாக ஏன் ஆய்வு செய்யப்பட வேண்டும் என வினாவுவேமாயின், மாகாணசபை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் மாவட்ட அடிப்படையிலேயே இடம்பெறுகின்றன. இத்தேர்தல் பெறுபேற்றின் அடிப்படையிலேயே குறித்த இனத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் தீர்மானிக்கப்படுகின்றது. இங்கு ஓர் இனம் வாக்களிப்பு நடத்தையில் அசமந்தப் போக்கை வெளிப்படுத்துமெனில், தமது இனத்தின் விகிதாசாரத்திற்குக் குறைவான அரசியல் பிரதிநிதுத்துவத்தையே பெற்றுக்கொள்ள முடியும். இந்நிலை குறித்த சமூகத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியிலான பின்னடைவை ஏற்படுத்தும்.