dc.description.abstract |
இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் ஏனைய சமூகத்தவர்களோடு இணைந்து வாழ்வதால் அவர்களது திருமணங்களில் பிற கலாசார அம்சங்களும் தாக்கம் செலுத்துகின்றன. காத்தான்குடியில் வாழும் முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள் இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழும் முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்களிலிருந்து வேறுபடுவதை அவதானிக்கலாம். அவர்களது திருமணங்களில் பல சம்பிரதாயங்கள் காலத்திற்குக் காலம் மாறுதல்களையும் திரிபுகளையும் அடைந்திருப்பதோடு சில சம்பிரதாயங்கள் அழிந்தும் பல விடயங்கள் புதிதாக புகுந்தும் உள்ளன. இப்பிரதேசத்தைச் சுற்றி தமிழர் கிராமங்கள் காணப்படுகின்றமையால் இந்துக்களின் பழக்க வழக்கங்கள் முஸ்லிம்களது திருமண விடயங்களில் அதிக தாக்கம் செலுத்துகின்றன. இங்கு இடம்பெறுகின்ற திருமணங்களில் திருமணப் பேச்சுவார்த்தை ஆரம்பித்தது முதல் திருமணம் முடிந்து சில தினங்கள் வரை பல்வேறு சம்பிரதாயங்கள் பின்பற்றப்படுவதனால் அவை திருமண தினத்திற்கு முதல் நடக்கும் சம்பிரதாயங்கள், திருமண தினத்தன்று நடக்கும் சம்பிரதாயங்கள், திருமண தினத்தின் பின் நடக்கும் சம்பிரதாயங்கள் எனும் அடிப்படையில் இவ்வாய்வில் மூன்று வகையாக நோக்கப்படுகின்றன. இவ்வாய்வில் விவரண ஆய்வு முறைமைகள் கையாளப்பட்டிருப்பதோடு முதலாம், இரண்டாம்; நிலைத் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. திருமணப் பதிவாளர்கள், இஸ்லாமிய அறிஞர்கள், சமூகத்தலைவர்கள், தஃவா இயக்கங்களின் உறுப்பினர்கள், சமூக சேவை நிறுவனங்களின் உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்து நேர்காணல் மூலமும் திருமணப் பேச்சுவார்த்தையில் பேசப்படுகின்ற விடயங்கள், கொடுக்கல் வாங்கல்கள், பின்பற்றப்படும் நடைமுறைகள், அவைகளைச் சீர்செய்வதற்கென மேற்கொள்ளப்படும் முயற்சிகள் போன்றவைகள் நேரடியாக அவதானிக்கப்பட்டும் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இரண்டாம் நிலைத் தரவுகளாக புத்தகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைக் கட்டுரைகள், வெளியிடப்படாத ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வு நூற்கள்;, துண்டுப்பிரசுரங்கள் முதலானவற்றிலிருந்து பெறப்பட்டுள்ளதோடு விவரணப்பகுப்பாய்வு மூலம் ஆய்வின் பெறுபேறுகள் கண்டறியப்பட்டுள்ளன. |
en_US |