dc.description.abstract |
இலங்கையில் திருமண முறையியலானது சமூக, சமய, கலாசார பின்னணிக்கேற்ப சமூகத்திற்கு சமூகம் வேறுபட்டுக் காணப்படுகின்றது. முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுடன் இணைந்து வாழ்வதால் இலங்கை முஸ்லிம்களின் திருமணங்களிலும் பல பிற கலாசார அம்சங்கள் ஊடுருவியுள்ளதுடன் திருமண சம்பிரதாயங்களும் இடத்துக்கிடம் வேறுபட்டும் காணப்படுகின்றன. குறிப்பாக கிழக்கிலங்கையில் வாழும் முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள் இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழும் முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்களிலிருந்து வேறுபடுவதை அவதானிக்கலாம். காத்தான்குடி முஸ்லிம்களின் திருமணப் பழக்க வழக்கங்கள் பல சம்பிரதாயங்களை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்ற அதேவேளை அவை காலத்திற்குக் காலம் பல மாறுதல்களையும் திரிபுகளையும் அடைந்திருப்பதோடு சில சம்பிரதாயங்கள் அழிந்தும் பல விடயங்கள் புதிதாக புகுந்தும் உள்ளன. காத்தான்குடிப் பிரதேச திருமணங்களில் பின்பற்றப்படுகின்ற சம்பிரதாயங்கள் தோன்றுவதற்கு ஏதுவாகிய காரணங்கள் தொடர்பான ஆய்வே இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பிரதேசத்திலே இடம்பெறுகின்ற திருமணங்களில் திருமணப் பேச்சுவார்த்தை ஆரம்பித்தது முதல் திருமணம் முடிந்து சில தினங்கள் வரை பல்வேறு சம்பிரதாயங்கள் பின்பற்றப்படுகின்றன. இவ்வாய்வில் விவரண ஆய்வு முறைமைகள் கையாளப்பட்டிருப்பதோடு முதலாம், இரண்டாம்; நிலைத் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. திருமணப் பதிவாளர்கள், இஸ்லாமிய அறிஞர்கள், சமூகத்தலைவர்கள், தஃவா இயக்கங்களின் உறுப்பினர்கள், சமூக சேவை நிறுவனங்களின் உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்து நேர்காணல் மூலமும் திருமணப் பேச்சுவார்த்தையில் பேசப்படுகின்ற விடயங்கள், கொடுக்கல் வாங்கல்கள், பின்பற்றப்படும் நடைமுறைகள், அவைகளைச் சீர்செய்வதற்கென மேற்கொள்ளப்படும் முயற்சிகள் போன்றவைகள் நேரடியாக அவதானிக்கப்பட்டும் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இரண்டாம் நிலைத் தரவுகளாக புத்தகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைக் கட்டுரைகள், வெளியிடப்படாத ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வு நூற்கள்;, துண்டுப்பிரசுரங்கள் முதலானவற்றிலிருந்து பெறப்பட்டுள்ளதோடு விவரணப்பகுப்பாய்வு மூலம் ஆய்வின் பெறுபேறுகள் கண்டறியப்பட்டுள்ளன. |
en_US |