Abstract:
எமது உடல் உறுப்புக்கள் அனைத்தும் இறைவனால் எமக்கு வழங்கப்பட்ட மாபெரும் அருட்கொடைகளாகும். ஐம்புலன்களை எமது இச்சைப்படி பயன்படுத்த முடியுமாக இருந்தாலும் அவற்றை வரையறைகள், கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்துவதே மனித வாழ்வு பண்பட, செம்மைப்படுத்த சிறந்த வழியாக அமையும். மனிதனுக்குள்ள அவயவங்களிலே நா மிக முக்கியமானதாகையால்தான் இறைவன் மனிதனையும் மிருகத்தையும் வேறுபடுத்தியுள்ளான். ஆகவே மனிதன் நாவைக் காத்தல் விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இன்று குடும்பங்களை சிதைத்து, ஊர் ஒற்றுமையைக் குழப்பி, முழு மனித சமூகத்தின் நிம்மதியையும் இல்;லாமல் செய்யும் அனைத்துப் பிரச்சினைகளும் நாவு மூலமே நடந்தேறி வருகின்றன.
இதுவரை உலகில் தோன்றிய அனைத்துவிதமான சமய கோட்பாடுகளும், சித்தாந்தங்களும் புராண இதிகாசங்களும் நாவடக்கம் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. நாவைப் பேணும் விடயத்தில் திருக்குறள் பின்வருமாறு கூறுகிறது.
'தீயினாற் சுட்டபுண் உள்ஆறும்; ஆறாதே
நாவினாற் சுட்ட வடு'
தீயினால் சுடப்பட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும். ஆனால் நாவினால் சுட்ட வடுவானது ஒரு போதும் மறையாது.
'யாகாவார் ஆயினும் நா காக்க் காவாக்கால்
சோகாப்பர் சொல் இழுக்குப்பட்டு'
ஒருவர் எவற்றை அடக்காவிட்டாலும் நாக்கு ஒன்றையாவது தீய சொற்களைப் பயிலாமல் அடக்கியாள வேண்டும். அங்ஙனம் அடக்கியாளாவிட்டால் பேசும் பொழுது சொற்குற்றத்திற்கு ஆளாகிப் பெரிதும் துன்பப்படுவர்.
'வில்லம்பை விட சொல்லம்பு வலிமையானது'
என்று ஒரு அரபுப் பழமொழியும் உண்டு. விட்ட அம்பையும் பேசிய சொல்லையும் மீளப்பெற முடியாது. எனவேதான் நாவைப் பேணுகின்ற விடயத்தில் இஸ்லாம் அதிக கவனத்தைச் செலுத்தியிருக்கின்றது. நாவடக்கம், நாவைப்பேணுதல் போன்ற விடயங்கள் ஹதீஸ்களில் எவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளன என்று அறிந்து கொள்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.