dc.description.abstract |
பண்பாடு குறித்துப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள்
அவரவர் புரிதலில் விளக்கியிருக்கிறார்கள். செயற்பாட்டியல் கோட்பாடு, அமைப்பியல் கோட்பாடு,
அறிதல்சார் கோட்பாடு, குறியீட்டுக் கோட்பாடு, சார்பியல் கோட்பாடு, நடத்தைசார்
கோட்பாடு, படிமலர்ச்சிக் கோட்பாடு எனப் பல்வேறு கோட்பாட்டு நோக்குகளில் பண்பாடு
என்பதனைப் புரிந்து கொள்ளும் முயற்சி தொடர்கிறது. இவற்றுள்
ஒரு கோட்பாட்டு நோக்கிலான விளக்கம்தான் சரியானது என்றும்
நிறைவானது என்றும் சொல்ல இயலாது. பல்வேறு சமூக, பொருளாதார,
அரசியல் காரணிகளால் பண்பாடு மாறிக் கொண்டே இருக்கிறது.
இத்தகைய புறக் காரணிகளோடு அகக் காரணிகளும் பண்பாட்டில்
மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. பண்பாட்டின் உள்ளார்ந்த பண்பான
நிகழ்த்துகை (Pநசகழசஅயnஉந) என்பது முக்கியமான அகக் காரணியாகும்.
(நிகழ்த்துதல், நிகழ்த்துகை ஆகிய இரு சொற்களும் ஒரே பொருண்மை
யில் சூழலுக்கு ஏற்ப இனிப் பயன்படுத்தப்படும்). பண்பாட்டின்
அனைத்து அம்சங்களும் எப்போதும் நிகழ்த்தப்பட்டுக் கொண்டே
இருப்பதால்தான் அவை மறுஉற்பத்தியாகிக் கொண்டும் பெருகிக்
கொண்டும் மாறிக்கொண்டும் இருக்கின்றன. எந்தவொரு பொருளாக
இருந்தாலும், (அது கல்லாக இருந்தாலும் மரம் செடி கொடிகளாக
இருந்தாலும்) பண்பாட்டு நிகழ்த்துதலுக்குள் நுழையும்போது அதுவும்
நிகழ்த்துதலின் அங்கமாகிப் பண்பாட்டுப் பொருண்மையை உற்பத்தி
செய்வதோடு மானிடவியல் ஆய்வாளர் பிரானிஸ்லா மாலினொஸ்கி
(டீசழnளைடயற ஆயடiழெறளமல: 1944) என்பார் கூறுவதுபோல அது மனிதர்களின்
முக்கியமான மூன்று தேவைகளான உயிரியல் தேவை, சமூகவியல்
தேவை, உளவியல் தேவை ஆகியவற்றை நிறைவு செய்வதற்கான
செயல்பாடுகளிலும் ஈடுபடுகின்றது. ஒரு மண்பானை வனையப்பட்டவுடன்
அது பண்பாட்டுப் பொருளாகி விடுவதில்லை. அது நிகழ்த்தப்படும்போதே
பண்பாட்டு வடிவமாகிறது. அதாவது அதனைத் திருமணச் சடங்கு,
பொங்கற் திருவிழா, இறப்புச் சடங்கு எனப் பல்வேறு பண்பாட்டுநிகழ்த்துதல்களில் பங்கு பெறச் செய்யும்போதே அதன் பண்பாட்டுப்
பொருண்மையை உணர்ந்து கொள்ள முடிகிறது. திருமணச் சடங்கில்
அரசாணிப் பானையாகவும் (கருப்பை என்பதைக் குறிப்பது), இறப்புச்
சடங்கில் கொள்ளிப் பானையாகவும் (உயிர் பிரிதலைக் குறிப்பது),
பொங்கற்திருவிழாவில் வளமைப் பானையாகவும் அர்த்தப்பட்டு
மேற்குறிப்பிட்ட மூன்று தேவைகளையும் நிறைவு செய்கிறது.
மேற்குறிப்பிட்ட பண்பாட்டுப் பொருண்மைகள் கூடப் பிரதேசங்களுக்குத்
தகுந்தவாறு வேறுபடலாம். |
en_US |