Abstract:
நான்கு வேதங்கள், பதினெண் ஸ்மிருதிகள், (தர்மசாஸ்திரங்கள்),
அர்த்த சாஸ்திரம், பதினெண் ஸ்மிருதிகளுக்குப் பிற்காலத்தில் செய்யப்
பட்ட உரைகள் ஆகியவற்றை இந்துச் சட்ட மூலங்கள் எனக் கொள்வது
மரபாகும்.
இந்துக்களின் பேரிதிகாசங்களும் பதினெண் மகாபுராணங்களும்
பிரதிபலிக்கின்ற சமூகவாழ்வியல் நெறிமுறைகள் மேற்குறித்த இந்துச்
சட்டமூலங்களை அடியொற்றிக் கட்டமைக்கப்பட்டவையேயாகும்.
எவ்வாறாயினும் 'இந்து' என்ற கருத்துருவாக்கத்தில் இவை மட்டும்
உள்ளடங்கவில்லை. அகன்ற பரதகண்டத்தில் (இதுவே பிற்காலத்தில்
பாரதம் ஆயிற்று) வாழ்ந்த பல்வேறு இனக்குழுக்கள், பழங்குடிகள்
ஆகியவற்றின் சமூக வழக்காறுகள், கால்வழிமரபுகள் உள்ளிட்ட பரந்த
பண்பாட்டு வாழ்வியற் புலங்களின் விகசித்த இணைப்பையே அது
சுட்டி நிற்கின்றது. எனவே 'இந்து' என்ற ஒற்றைச் சொல்லை வெறுமனே
பாரசீகரின் சுட்டுச் சொல்லாகவோ அன்றி வைதிக பௌராணிக
சமயபண்பாட்டுப் புலமாகவோ ஒற்றைப் பரிமாணமாகக் கருத்துவிளக்கம்
செய்வதும் பொருத்தமற்றதோர் அணுகுமுறையேயாம்.