Abstract:
20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப்பகுதியில் தோன்றிய
அழகியல் சார்ந்த துறைகளுள் ஒன்றாக சூழலியல் அழகியல் காணப்
படுகின்றது. இயற்கை சூழல் பற்றிய ஆய்வுகள் முன்னொருபோதும்
இல்லாத அளவிற்கு பல்வேறு துறைகள் சார்ந்த அறிஞர்களினாலும்
ஆராய்ச்சியாளர்களினாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் இக்காலப்
பகுதியில் சூழல் பற்றிய அழகியல் நோக்கு முக்கியத்துவம் பெறுகின்றது.
சூழலியல் அழகியலில் அடிப்படை சிந்தனைகளை நாம் ஜேர்மானிய
மெய்யியலாளரான இமனுவல் காண்டிடம் காணமுடிகின்றது. காண்ட்
அளவிடமுடியா அழகு என்ற கருத்தின் அடிப்படையில்
இயற்கை சூழலின் அழகினை எமக்கு அறிமுகப்படுத்துகின்றார்.
இத்தகைய நோக்கு சூழலியல் அழகியலின் ஆரம்பமாக அமைந்து
விடுகின்றது. இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட சூழல்
தொடர்பான அழகியல் சார்ந்த விடயங்களையும் மதிப்பீடுகளையும்
உள்ளடக்கிய துறையாக சூழலியல் அழகியல் காணப்படுகின்றது.
அழகியல் வரலாற்றில் சூழல் சார்ந்த அழகியலுடன் தொடர்புபட்ட
நயத்தல் என்பது பல வளர்ச்சி நிலைகளை கண்டுள்ளது.
18 ஆம் நூற்றாண்டில் இருந்து தற்காலம் வரை பல கட்டளைபடிம மாற்றங்களை இந்தத் துறை கண்டுள்ளது. இவற்றை ஒன்றன்
பின் ஒன்றாக நோக்குவோம். சூழலியல் அழகியலின் வளர்ச்சியினை
கட்டளைபடிம அடிப்படையில் நோக்குதல் சூழலியல் அழகியலை
புரிந்துகொள்வதற்கு மிக இலகுவான வழியாகும்.