Abstract:
பெண்ணியக் கருத்துநிலைகளும் அவை பற்றிய உரையாடல்களும்
ஆணாதிக்கத்துக்கு எதிரான உரையாடல்களாகவே ஆரம்பமாகின்றன.
ஆண் அதிகாரச் சமூகமும் அதன் ஆதிக்கக் கருத்துருவங்களும்
பெண்களின் சுயாதீனமான இருத்தலுக்குப் பெருஞ் சவாலாக
விளங்குகின்றன. அதனால் பெண்களின் இருப்புப் பற்றிய எல்லாவிதமான
உரையாடல்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆண்
அதிகாரத்துடன் தொடர்புபட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. பெண்களின்
சுயாதீனமான இருத்தலை நிலைநிறுத்த முயற்சிக்கும் பெண்ணியம்,
நிலவுகின்ற மரபார்ந்த ஆணாதிக்கச் சமூக அமைப்பையும் அச்சமூக
அமைப்பைக் கட்டிக்காக்கும் கருத்துருவங்களையும் நிராகரித்து,
அவற்றை மீள்நிர்மாணம் செய்ய முயற்சிப்பதோடு அம்மீள்நிர்மாணத்திற்குத்
தடையாக அமையும் அனைத்துத் தளைகளையும் தகர்த்தெறிவதற்கான
கலகத்தையும் முன்னிறுத்துகின்றது. அதனாலேயே பெண்ணிய
நிலைப்பட்ட அணிதிரட்டல், விழிப்புணர்வு முதலிய போராட்டச்
செயற்பாடுகள் யாவும் ஆண் அதிகாரத்தை எதிர்ப்பதையும் பால்
அசமத்துவத்தை நிர்மூலமாக்குவதையும் மையச்சரடாகக் கொண்டுள்ளன.