Abstract:
மறையோர் தேஎத்து மன்றல் எட்டு என்பது வடமொழி மரபில் கூறப்படும்
எட்டுவகைத் திருமணங்கள். இவற்றில் அன்பின் ஐந்திணை சார்ந்த
மணம் என்பது 'துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே'
என்கிறார் தொல்காப்பியர். பிற்கால இலக்கண நூல்களில் இறையனார்
அகப்பொருள் இவ்விடயத்தை விரித்துப் பேசுகிறது:
'அன்பின் ஐந்திணைக் களவெனப் படுவது
அந்தண ரருமறை மன்ற லெட்டனுள்
கந்தருவ வழக்க மென்மனார் புலவர்.'
தொல்காப்பியர் கூறிய நல்யாழ்த் துணைமையோர் இயல்பு என்பது
கந்தருவ மணமா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, முதலில், இந்த
எட்டுவகை மணங்களைப்பற்றி உரையாசிரியர்களும், பிற்கால
இலக்கணகாரர்களும் சொல்லுகிறவற்றைப் பார்ப்போம்.