Abstract:
சங்க இலக்கியப் பிரதிகளுக்கான உரையாக்கப் புலமைச் செயற்பாடுகள்
தமிழகத்திலும், ஈழத்திலும் நடைபெற்று வந்துள்ளன. சங்க இலக்கிய
உரைகளின் வரலாற்றை நோக்கும்போது, உரையாசிரியர்கள் காலம்
என்று அடையாளப்படுத்துகின்ற கி.பி. 10ஆம் நூற்றாண்டு தொடக்கம்
கி.பி. 17ஆம் நூற்றாண்டு வரையான காலமே முதன்மை இடம்
பெறுகின்றது. இக்காலப்பகுதியிலேயே தமிழ்ப் பண்பாட்டில் உரையாக்க
மரபு என்பது ஓர் உப பண்பாட்டு இலக்கியப் பாரம்பரியமாக உருவானது.
18ஆம், 19ஆம் நூற்றாண்டுகளில் அறிமுகமான அச்சுப் பண்பாடும்
அதனூடாக நிகழ்த்தப்பட்ட நூல் பதிப்பியல் செயற்பாடுகளும் சங்க
இலக்கியம் பற்றிய வாசிப்புகளுக்கும், தமிழ்ச் சமுதாயத்தின் வரலாற்
றைக் கட்டமைப்பதற்கும் அடிப்படையாக அமைந்தன. பழந்தமிழ்
இலக்கியப் பிரதிகளான சங்க இலக்கியங்களை சமகால வாசிப்பு
வெளிக்குள் கொண்டுவருவதற்கான உரைமுயற்சிகளும் பல நிலைகளில்
மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப்
பகுதியிலிருந்து இவ்வகை உரையாக்கங்கள் வெளிவந்தன. அவ்வகையில்
வெளிவந்த உரைகளுள் சி. கணேசையரின் உரைகளும், வேங்கடசாமி
நாட்டாரின் உரைகளும் மிக முக்கியமானவை. சி. கணேசையரின் அக
நானூற்று – களிற்றியானைநிரையுரையையும், வேங்கடசாமி நாட்டாரின்
அகநானூற்று – களிற்றியானைநிரையுரையும் ஒப்பிட்டு ஆராய்வதாக
இவ்வாய்வு அமைகின்றது. சங்க இலக்கியப் பிரதிகளுக்கு எழுதப்பட்ட
உரைகளின் வரலாற்றில் ஈழத்து உரைமரபினையும், தமிழ்நாட்டு உரை
மரபினையும் கோடிட்டுக் காட்டுவதாக இவ்வாய்வு அமைகின்றது.