Abstract:
அபிவிருத்தி அடைந்த நாடுகள் மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் பேரினப் பொருளாதார இலக்குகளை அடைந்து கொள்வதை நோக்காகக் கொண்டுள்ளன. இலங்கை போன்ற வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் உயர் பொருளாதார வளர்ச்சியை அடைந்து கொள்வதில் பணவீக்கம் மற்றும் வட்டி வீதம் போன்ற பேரினப் பொருளாதார மாறிகள் பெரும் செல்வாக்கு செலுத்துவனவாக காணப்படுகின்றன. அந்தவகையில் இலங்கையில் பணவீக்கம் மற்றும் வட்டி வீதம் என்பன பொருளாதார வளர்ச்சியில் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்வதை பிரதான நோக்கமாகக் கொண்ட இவ்வாய்வானது 1990 தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரையான காலத் தொடர் தரவுகளை கவனத்திற் கொண்டு ஆராயப்பட்டுள்ளது. இவ்வாய்வில் சார்ந்த மாறியாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதமும் பிரதான சாரா மாறியாக பணவீக்கம் மற்றும் வட்டி வீதமும் துணை சாரா மாறியாக வேலையின்மை, வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு போன்ற மாறிகளின் குறுங்கால, நீண்ட கால மற்றும் காரண காரிய தொடர்புகள் குறித்த பெறுபேறுகள் பெறப்பட்டுள்ளன. அதற்கமைய இவ்வாய்வில் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், பணவீக்கம் மற்றும் வட்டி வீதம் என்பன 5% பொருளுண்மை மட்டத்தில் பொருளாதார வளர்ச்சி மீது நீண்ட காலத்தில் புள்ளிவிபர ரீதியாக பொருளுண்மை தன்மை வாய்ந்த எதிர்க்கணியத் தாக்கத்தினையும், குறுங்காலத்தில் வட்டி வீதம் பொருளுண்மை தன்மை வாய்ந்த எதிர்க்கணிய தாக்கத்தை செலுத்தும் அதேவேளை பணவீக்கமானது பொருளுண்மை தன்மையற்ற எதிர்க்கணிய தாக்கத்தை செலுத்துகின்றது. மேலும் ECT(-1) பெறுமதி 0.6970 மாறிகளுக்கிடையே கூட்டு ஒருங்கிணைபுத் தொடர்பினை கொண்டதாக அமைவதுடன் வெளிவாரி அதிர்ச்சிகளின் காரணமாக பொருளாதார வளர்ச்சியில் ஏற்படுகின்ற குறுங்கால சமநிலையின்மையானது ஒரு வருடத்தின் பின்னர் ஒவ்வொரு வருடமும் அண்ணளவாக 69.70% என்னும் வேகத்தில் சரிப்படுத்தப்பட்டு நீண்டகால சமநிலையை நோக்கி நகர்வடையும். மேலும் பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம் மற்றும் வட்டி வீதம் என்பவற்றுக்கு இடையே ஒரு வழி காரண காரிய தொடர்பு காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இலங்கையில் பணவீக்கத்தை குறைந்த வீதத்திலும் வட்டிவீதத்தை நிலையாகப் பேணவும் இலங்கை மத்திய வங்கி சிறந்த பண பணவியல் கொள்கைகளை உருவாக்கி பின்பற்றுவதுடன் வரி கட்டமைப்பை வினைத்திறனாக செயல்படுத்துவதுடன் அரசு அதன் வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையை குறைக்க முயற்சிப்பதுடன் செலவை குறைத்து வருவாய் அடித்தளத்தை விரிவுபடுத்துதல் போன்ற விடயங்களை
மேற்கொள்ள வேண்டும்.