Abstract:
இன்றைய நவீன ஜனநாயக அரசியல் முறைமையில் அரசியற் கட்சிகள் ஜனநாயகத்தின் அளவுகோலாகப் பார்க்கப்படுகின்றது. கட்சிகள் என்பது அரசியல் அதிகாரத்தை அடைவதையும், அதனைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்படும் அரசியல் சார்ந்த அமைப்பாகும். இவை பொதுவாக தேர்தல்களில் பங்கு கொள்வதன் மூலம் இந் நோக்கத்தை அடைய முயல்கின்றன. அரசியல் கட்சிகள் பொதுவாக ஒரு வெளிப்படையான கொள்கையோ அல்லது ஒரு குறித்த இலக்குடன் கூடிய நோக்கையோ கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இலங்கையும் ஜனநாயக நாடு என்ற வகையில் இங்கும் கட்சி முறை கொண்ட அரசாங்க கட்டமைப்பு காணப்படுகின்றது. இங்கு இரு பிரதான கட்சிகளை அடிப்படையாகக் கொண்ட பல கட்சி முறை காணப்படுகின்றது. இங்கு பிரதான கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற கட்சிகளே காணப்பட்டது. இதில் ஐக்கிய தேசியக் கட்சியானது இலங்கையின் சுதந்திரத்துடன் தொடர்புடைய கட்சியாகும். இக் கட்சியானது பல தடவைகள் நாட்டை ஆட்சிசெய்துள்ளது. பல தேர்தல்களில் பாரிய வெற்றிகளையும் தோல்விகளையும் கண்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் வளர்ச்சிக்கு அதன் தலைமைகள் பாரிய பங்களிப்பினை வழங்கியுள்ளனர். அதனடிப்படையில் 1994 இன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கீழ் கட்சியின் செயற்பாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் எவ்வாறு காணப்படுகின்றது என்பதனை அறிவதோடு, இலங்கை அரசியலில் அவரது அனுபவ அரசியல் எந்தளவிற்கு வகிபாகம் கொண்டிருக்கிறது, அவரது அரசியல் தலைமைத்துவம் எந்தளவிற்கு வெற்றி தோல்விகளை சந்தித்து பயணிக்கிறது என்பன தொடர்பாக பகுப்பாய்வு செய்வதாக இவ்வாய்வு அமையப்பெற்றுள்ளது.