Abstract:
நாடா வளர்ச்சியும் அதன் தாக்கங்களும்: ஆறுமுகத்தான் குடியிருப்பு தொடக்கம்
கொம்மாதுறை வரையான பிரதேசத்தை அடிப்படையாகக்கொண்ட ஆய்வு எனும்
தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வானது ஆய்வுப்பிரதேசத்தில் நாடா
வளர்ச்சிப்பாங்கினை அடையாளப்படுத்தி அதன் தாக்கங்களை மதிப்பிடுதல் எனும்
பிரதான நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டது. ஆய்வுப்பிரதேசத்தில் விரைவான
நகர வளர்ச்சி ஏற்படுவதோடு வணிக நிறுவனங்கள் நாடாப்பாங்கில் விருத்தி
பெறுதல் போன்ற ஆய்வுப்பிரச்சினைகளின் அடிப்படையில் இவ் ஆய்வானது
முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ் ஆய்வானது கலப்பு முறையிலான ஆய்வாக
அமைவதோடு இவ்வாய்விற்காக நேரடி அவதானிப்பு, நேர்காணல், கலந்துரையாடல்
போன்ற முதலாம் நிலைத்தரவுகளும் இரண்டாம் நிலைத்தரவுகளான பிரதேச
செயலக அறிக்கைகள், ஆய்வுப்பத்திரிகைகள், புத்தகங்கள் போன்றவற்றில்
இருந்தான தரவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் இவ்வாய்விற்காக
Arc GIS 10.3, Google Earth Pro, Ms Excel, Mapsme, OpenStreet map
மென்பொருட்கள் பயன்படுத்தப்பட்டு படங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு
நிலப்பயன்பாட்டுப்பகுப்பாய்வு. சனத்தொகை அடர்த்திப்பகுப்பாய்வு, Buffer
பகுப்பாய்வு, விபரணப்பகுப்பாய்வு, அடிப்படை புள்ளிவிபரப்பகுப்பாய்வு போன்ற
பகுப்பாய்வு முறைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வின் பெறுபேறுகளாக
2003 2023 வரையான காலப்பகுதியில் நகர வளர்ச்சியானது துரிதமாக இடம்
பெற்று வருவதனால் கட்டமைக்கப்பட்ட பகுதியில் அதிகரிப்பு காணப்படுவதோடு
ஆய்வுப்பிரதேசத்தில் நாடா வளர்ச்சி, சிதறல் வளர்ச்சி. குறைந்த அடர்த்தி வளர்ச்சி
போன்ற நகர விரிவாக்கப்பாங்குகளும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இவ்
நாடா வளர்ச்சியின் காரணமாக அதிகளவான நுகர்வாளர்களைப்பெறுதல்,
வெவ்வேறு அணுகல் தன்மைகளை கொண்டிருத்தல், சேவைகளை இலகுவாகப்பெற
முடிதல் போன்ற சாதகமான தாக்கங்களும் போக்குவரத்து நெரிசல், வீதியோரங்கள்
ஆக்கிரமிக்கப்படுதல், நடைபாதைகள் இன்மை, வீதி விபத்துக்கள் ஏற்படுதல்,
வினைத்திறனற்ற நகர நிலப்பயன்பாடு, தரிப்பிட வசதியின்மை போன்ற பல
பாதகமான தாக்கங்களும் மதிப்பிடப்பட்டுள்ளன.
இவ் நகர விரிவாக்க
வடிவங்களில் ஒன்றான நாடா வளர்ச்சியால் ஏற்படக்கூடிய பாதக தாக்கங்களை
குறைப்பதற்காக திட்டமிட்ட முறையில் வணிக நிறுவனங்களை அமைத்தல்,
மண்டல ஒழுங்குமுறைகளை பின்பற்றுதல், பசுமைப்பட்டைகளை உருவாக்குதல்,
வீதியின் அகலங்களை அதிகரித்தல், நகரத்தினுள் காணப்படுகின்ற நிலங்களை
வினைத்திறனாகப்பயன்படுத்தல், நடைபாதைகளை அமைத்தல், தரிப்பிடங்களை
உருவாக்குதல் போன்ற வழிமுறைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.