Abstract:
"வலப்பனை பிரதேச செயலகப்பிரிவில் காணப்படும் காட்டு வளம் பற்றிய மதிப்பீடு" எனும் தலைப்பில் 2012 மற்றும் 2022 ஆகிய காலப்பகுதிகளை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆய்வுக் கட்டுரையானதுப் புவியியற்துறைக்கு சமர்ப்பிக்கப்படுகின்றது. வலப்பனை பிரதேச செயலகப் பிரிவில் கடந்த தசாப்தங்களில் காடுகளுடைய பாதுகாப்புத் தேவை அதிகரித்துள்ளது. இதற்கமைய வலப்பனை பிரதேசத்தில் காணப்படும் காடுகளின் வகைகள் மற்றும் இக் காடுகள் ஆரம்ப நிலையில் இருந்து தற்போது எவ்வாறு மாற்றமடைந்து வந்துள்ளது. மாற்றமடைந்துள்ளமைக்கான காரணங்கள், அதனால் ஏற்பட்ட விளைவுகள் அதை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை முன்மொழியும் நோக்கிலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது நேர்காணல் மூலம் பெறப்பட்ட முதலாம் நிலைத் தரவுகளைக் கொண்டு இடம்சார் படங்களின் உதவியுடனும், வன பாதுகாப்பு திணைக்களம், வலப்பனை பிரதேச செயலகம், வளிமண்டலவியல் திணைக்களம் ஆகியவற்றில் இருந்துப் பெறப்பட்ட தரவுகள் மூலம் இருந்து பெறப்பட்ட இரண்டாம் நிலைத் தரவுகளைக் கொண்டும் வலப்பனை பிரதேச செயலகப் பிரிவின் காடுகள் பற்றிய மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வலப்பனை பிரதேச செயலகப் பிரிவில் காடுகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பொருளாதார ரீதியாக பெறுமதி வாய்ந்த மரங்கள் குறைவடைதல், மண்ணரிப்பு, நுண்காலநிலையில் மாற்றம் வனவிலங்குகளின் வாழ்விடம் அழிவடைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டிற்கு இடையில் 31% ஹெக்டேயர் காடுகள் இழக்கப்பட்டுள்ளன.குறிப்பாக விவசாய நிலங்களின் விஸ்தரிப்பு. அபிவிருத்தி நடவடிக்கைகள், மரதளபாடக் கைத்தொழிலின் விருத்தி மற்றும் அதிகரித்த விறகுத் தேவைக் காரணமாக காடுகளில் இருந்து பயன்களை பெற்றுக்கொள்கிறார்கள். இப்பிரதேசத்தில் சட்டவிரோதமாகக் காட்டு வளம் அழிக்கப்படுவதற்கு எதிராக முறையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தல். விவசாய காடாக்கத் திட்டத்தை விரிவுப்படுத்திக் கட்டுப்பாடான மரதளபாட உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தல், மண்ணரிப்பு ஏற்பட்டு தரிசாக்கப்பட்டுள்ள நிலப்பகுதிகளில் மீள்காடக்கத் திட்டத்தை மேற்கொள்ளல், அடர்ந்த காட்டுப் பிரதேசங்களை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகப் பிரகடனப்படுத்துவதன் மூலம் அப்பிரதேச உயிரினப் பல்வகைமையை பாதுகாத்தல் போன்ற செயற்பாடுகள் ஊடாக வலப்பனை பிரதேச செயலகப் பிரிவில் காட்டு வளங்களின் வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதோடு அதனால் ஏற்படக் கூடிய சூழல் ரீதியான பாதிப்புக்களையும் குறைத்துக் கொள்ளலாம். காட்டுவளப் பசுமைப் போர்வையை அழிவில் இருந்து
பாதுகாத்துக் கொள்ளவும் பல கருத்துக்களையும் முன்வைக்கும் வகையில் இவ்
ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது.