Abstract:
புவியியல் சிறப்பு கற்கையின் ஒரு பகுதியினை பூர்த்தி செய்யும் முகமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் "புத்தூர். வாதரவத்தை பிரதேசத்தின் குடிநீர் தரமதிப்பீடு" எனும் தலைப்பில் இவ்வாய்வுக் கட்டுரையானது சமர்ப்பிக்கப்படுகின்றது. நீரானது மனிதனது அத்தியாவசியத் தேவையாகவும் மாற்றீடு செய்யமுடியாத ஒரு வளமாகவும் காணப்படுகிறது. இந்த வளமானது பல்வேறு விதத்திலும் மாசடைந்து கொண்டும் குறைந்து கொண்டும் வருகிறது. இன்று உலக மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறுபட்ட சவால்களில் நீர்தரமிழப்பும் ஒன்றாகும். நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட வளமிக்க நாடான இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல. அந்தவகையில் இலங்கையின் வட மாகாணத்தின் யாழ் மாவட்டத்தில் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட புத்தூர், வாதரவத்தை பிரதேசத்தில் குடிநீரானது மாசடைந்து காணப்படுகின்றது. இப்பகுதியில் காணப்படும் குடிநீர் தொடர்பான தர நிலையை ஆராய்தல். குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள், குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் பிரச்சினை மற்றும் குடிநீரினை பேணுவதற்கான வினைத்திறனான ஆலோசனைகளை முன்வைத்தல் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. இவ்வாய்வுக்கான தரவுகள் முதலாம் நிலை. இரண்டாம் நிலைத் தரவுகளாக பெறப்பட்டன. முதலாம் நிலைத் தரவு சேகரிப்பு முறைகளான வினாக்கொத்துக்களை பகிர்ந்தளித்தல் (85), நேரடி அவதானிப்பு, நேர்காணல், என்பவற்றின் மூலம் பெறப்பட்ட தரவுகளும் இரண்டாம் நிலைத் தரவுகளான ஆய்வுக் கட்டுரைகள்.பிரதேச செயலக அறிக்கைகள், சஞ்சிகைகள். இணையம் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன. சேகரிக்கப்பட்ட தரவுகள் அளவுசார் மற்றும் பண்புசார் பகுப்பாய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. கிணற்று நீரின் பௌதிக இரசாயன தரமான நீரின் தர நிலைமைகள் தொடர்பான காரகடினத்தன்மை சுட்டெண் பரிசோதனை (pH), நீரின் மின்கடத்துதிறன் தொடர்பான பரிசோதனை (Electrical conductivity),மொத்த கரைந்துள்ள திண்மங்கள் தொடர்பான பரிசோதனை (Total Dissolve Solids), உவர்த்தன்மை ஆகியவை பரிசோதிக்கப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. இவ்வாய்வில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவானது நீரின் மின்கடத்துதிறன். நீரின் காரகடினத்தன்மை (pH),உவர்த்தன்மை என்பன சரியான அளவு மட்டத்தில் காணப்படுகின்றது. ஆனால் மொத்த திண்ம அளவானது சில இடங்களில் அதிகமாக காணப்படுகிறது. இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக வேண்டி மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல். ஆழமான கிணறுகளை அமைத்துக் கொடுத்தல். மழைநீர் சேகரிப்பு முறைகளை ஏற்படுத்திக் கொடுத்தல். குழாய் நீர் விநியோகத்தை பிரதேசத்திலுள்ள அனைத்து வீடுகளுக்கும் வழங்குதல், நீரைச் சேமிப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை கொண்டுவருதல் போன்ற
நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறப்பாக அமையும் என்பதே ஆய்வின்
முடிவாகும்