Abstract:
இன்றைய காலத்தில் இலங்கையில் காணப்படுகின்ற இயற்கை வளங்களானது பல்வேறு
சவால்களுக்குள்ளாகி வருவதனை அவதானிக்கமுடிகின்றது. அவ்வகையில்
சத்துருக்கொண்டான் பிரதேசத்தின் இயற்கை வளங்கள் தரமிழப்பின் காரணமாக மக்கள்
பல்வேறு பௌதிக, பொருளாதார மற்றும் சமூக தாக்கத்திற்கு உட்பட்டுள்ளமை
மிகப்பெரிய சவாலாக காணப்படுகின்றது. சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் வளங்களின்
முகாமைத்துவ செயற்பாட்டுக்காக கொண்டுவரப்பட்ட செயற்திட்டங்கள் முறையாக
நடைமுறைப்படுத்தப்படாமையினால்
பிரதேசத்தின்
வளங்கள் தொடர்ந்தும்
அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றது. அவ்வகையில் இவ்வாய்வானது
சத்துருக்கொண்டான் பிரதேசத்தின் இயற்கை வளங்கள் மற்றும் அவை தொடர்பான
பிரச்சனைகளை எடுத்துக்காட்டுவதுடன் அபிவிருத்திக்கான செயற்பாடுகளையும்
வெளிக்கொணர்வதாக அமைகின்றது. ஆய்வு பிரதேசத்தில் காணப்படுகின்ற
வளங்களினை அடையாளப்படுத்தி படமாக்கல் செய்துள்ளதுடன் இங்கு காணப்படுகின்ற
வளங்கள் சார் பிரச்சினைகளை எடுத்துக்காட்டுகின்ற வகையிலும் வளங்களை
மையப்படுத்திய அபிவிருத்திக்கான உபாயங்கள் பற்றியும் வெளிக்கொணர்வதனை
நோக்காகக் கொண்டு இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்விற்காக
தயாரிக்கப்பட்ட படங்கள் Google Earth செ.யலி மூலம் பெறப்பட்டு ஆய்வுப்பிரதேசத்தின்
வளங்கள் பற்றிய படம் ArcMap 10.4.1 மென்பொருள் மூலம் Georeference, Digitize
செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளதுடன் சத்துருக்கொண்டான் பிரதேசத்தின்
குடும்பங்களினை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்ட 66 வினாக்கொத்துக்கள்
மூலம் பெறப்பட்ட தரவுகள் Microsoft Excel மென்பொருள் மூலமாகவும் கலப்பு
முறைப்பகுப்பாய்வு செய்யப்பட்டு ஆய்வு நோக்கங்கள் அடையப்பட்டுள்ளன. மேலும்
SWOT பகுப்பாய்வு மூலமாக ஆய்வுப்பிரதேசத்தின் பலம், பலவீனம், வாய்ப்பு, தடை
என்பனவும்
இனங்காணப்பட்டுள்ளன.
சத்துருக்கொண்டான்
பகுதியில்
மானிடக்காரணிகளால் 82 சதவீதமான வளங்கள் தரமிழக்கச் செய்யப்படுவதும் அதில்
முறையற்ற கழிவகற்றலால் 48 வீதமான தரமிழப்பு ஏற்படுவதும் அறியப்பட்டுள்ளது.
இவ்வாய்வின் ஊடாக சத்துருக்கொண்டான் பிரதேசத்தின் வளங்கள் சார்ந்த
பிரச்சினைகள், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்பன விரிவாக
ஆராயப்பட்டுள்ளதுடன், வளங்களைப் பாதுகாப்பதற்கான முகாமைத்துவ நடவடிக்கைகள்
பற்றியும் அதனால் பிரதேசத்தினை எவ்வாறு அபிவிருத்தியடையச் செய்யலாம் என்பது
பற்றியும் வளம்சார் அபிவிருத்தியினை ஏற்படுத்துவதற்கான பரிந்துரைகளும் ஆய்வில்
முன்வைக்கப்பட்டுள்ளது.