Abstract:
மட்டக்களப்பு மக்களின் பிரதான வாழ்வாதாரமாக காணப்படுகின்ற மீன்பிடியில் இறால் வளர்ப்பும் ஒன்றாகும். அதற்கு மிகவும் சாதகமான சூழலும் புவியியல் அமைப்பும் காணப்படுகிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இறால் வளர்ப்பை அறிமுகப்படுத்திய இடமான மண்முனை தென்மேற்கு பிரதேசம் ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்டு "மண்முனை தென்மேற்கு பகுதியில் இறால் வளர்ப்பினை விருத்தி செய்வதற்கான வாய்ப்புக்கள்" எனும் தலைப்பின் கீழ் "மண்முனை தென்மேற்குப் பிரதேசத்தில் இறால் வளர்ப்பினை விருத்தி செய்வதற்கான வாய்ப்புக்களை கண்டறிதலும் அதனை விருத்தி செய்வதற்கான வழிமுறைகளை முன்வைத்தலும்" என்ற பிரதான நோக்கத்தின் அடிப்படையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக வினாக்கொத்து, நேரடி அவதானிப்பு, நேர்காணல், கலந்துரையாடல் ஆகிய முதலாம் நிலைத்தரவுகளையும் மற்றும் இரண்டாம் நிலைத்தரவுகளையும் பயன்படுத்தி தரவுகளும் தகவல்களும் பெறப்பட்டதுடன் மண் மற்றும் நீர் மாதிரிகளை பரிசோதனை செய்து இறால் வளர்ப்பிற்கு பொருந்துவதாகவுள்ளதா என்பதும் அறியப்பட்டது. இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளும் தகவல்களும் அளவு மற்றும் பண்பு ரீதியாக விளக்கப்பட்டுள்ளது. ArcGIS மென்பொதியினைப் பயன்படுத்தி இறால் வளரப்பிற்கு வாய்ப்பான இடங்கள், ஆய்வுப்பிரதேச போக்குவரத்து, குடியிருப்பு போன்றவை படமாக்கப்பட்டுள்ளதுடன் SWOT பகுப்பாய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் இறால் வளர்ப்பின் வரலாற்று விடயங்கள் மற்றும் இறால் வளர்ப்புக்கு வாய்ப்பான பௌதீக காரணிகளான புவியில் அமைவிடம், நீர் கிடைக்க கூடியதன்மையும் வழிந்தோடக்கூடிய தன்மை, நீர் மற்றும் மண்ணின் தரம், வாய்ப்பாக காணப்பட்டதுடன் மானிடக்காரணியான மின்சக்தி. போக்குவரத்து வசதி சமுக அரசியல் காரணிகள், சனநெரிசல் குறைவான பகுதியாக காணப்படல் போன்றவையும் வாய்ப்பாக காணப்படுவது எடுத்துக்காட்டபட்டுள்ளது. அத்துடன் மீண்டுமொருமுறை கைவிடப்படாமல் இருப்பதற்கு கைவிடப்பட்டமைக்கான காரணங்கள் கண்டறியப்பட்டடு வெளிப்படுத்தப்படுள்ளதுடன் இறால் வளர்பின் இன்றைய நிலை மற்றும் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் போன்ற விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதில் காலாகாலமாக காணப்படுகின்ற சவால்கள் விளக்கப்பட்டுள்ளதுடன் இறால் வளர்ப்பினை மேற்கொள்வதற்கு ஆதரவாக 75 சதவீதமான மக்கள் உள்மையை அறியமுடிந்ததுடன் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் இறால் வளர்ப்பினை மேற்கொண்டு பிரதேச அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி என்பவற்றை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதற்கான பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.