Abstract:
"நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவல் நிலப்பயன்பாடு மாற்றமும் விளைவுகளும் 2011 2023" எனும் தலைப்பிலான இவ்வாய்வானது ஆய்வுப் பிரதேசத்தின் 2011 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான நிலப்பயன்பாட்டு பாங்கினை கண்டறிந்து படமாக்கல், இவ்விரு ஆண்டுகளுக்கிடையிலான நிலப்பயன்பாட்டு மாற்றத்தினையும் அந்நிலப்பயன்பாட்டு மாற்றத்திற்கான காரணிகளையும் விளைவுகளையும் கண்டறிதல் மற்றும் நிலப்பயன்பாடு சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைப்பதை இவ்வாய்வு நோக்கங்களாகக் கொண்டுள்ளது. ஆய்வின் பொருட்டு நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவில் 2011 மற்றும் 2023 ஆகிய இரு ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நிலப்பயன்பாட்டு மாற்றத்தை புவியியல் தகவல் முறைக்கூடாக வெளிப்படுத்துவதோடு, ஆய்விற்கான தரவுகளானது முதலாம் நிலைத் தரவு சேகரிப்பு முறைகளான நேரடி அவதானிப்பு, நேர்காணல், கலந்துரையாடல் மூலமாகவும், இரண்டாம் நிலைத் தரவுகள் 2011, 2023 ஆம் ஆண்டுகளுக்கான செய்மதிப்படங்கள், வருடாந்த செயலாற்றுகை அறிக்கை நுவரெலியா 2022), நோர்வூட் பிரதேச செயலக மூலவளத்திரட்டு (2022) ஆகியவற்றில் இருந்தும் பெறப்பட்டுள்ளன. 2011, 2023 ஆம் ஆண்டுக்கான நிலப்பயன்பாட்டு அம்சங்களானது Google Earth Pro மற்றும் Arc GIS 10.4.1 மென்பாருட்களைப் பயன்படுத்தி அடையாளம் காணப்பட்டு குறித்த காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களானது இனங்காணப்பட்டுள்ளது. ஆய்வின் பெறுபேறுகளின்படி ஆய்வுப் பிரதேசத்தில் பிரதான நிலப்பயன்பாட்டு அம்சங்களாக காடுகள், கட்டமைக்கப்பட்ட பகுதி, தேயிலை நிலங்கள், நீர்நிலைகள், ஏனைய பயிர்கள், தரிசு நிலங்கள் என்பன அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. 2011, 2023 காலப்பகுதியில் ஆய்வுப் பிரதேசத்தின் நீர்நிலைகள் பாரியளவில் மாற்றமின்றிக் காணப்பட தேயிலை நிலங்கள், காட்டுப் பரப்பு, தரிசு நிலங்கள் மற்றும் ஏனைய பயிர்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் கட்டமைக்கப்பட்ட பகுதியானது 2011 2 1340.94 ஹெக்டயரிலிருந்து 2023 ஆம் ஆண்டு 4712.0 ஹெக்டயராக அதிகரித்துள்ளது. ஆய்வுப் பிரதேசத்தில் இவ் காலரீதியான நிலப்பயன்பாட்டு மாற்றத்திற்கு பொறுப்பாக குடித்தொகை வளர்ச்சி, அபிவிருத்தி நடவடிக்கைகள், காடழிப்பு, பொருளாதார நடவடிக்கைகள், கட்டமைக்கப்பட்ட பகுதிகளின் விரிவாக்கம், தேயிலை நிலங்கள் அழிவடைதல் பேன்ற காரணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் இவ் நிலப்பயன்பாட்டு மாற்றத்தின் மூலம் ஆய்வுப் பிரதேசத்தில் நிலச்சரிவு, நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படல், நிலப்பெறுமதி அதிகரித்தல், மண்ணரிப்பு, நிலத்திற்கான உரிமை கோருவதில் பிரச்சினைகள் ஏற்படுதல், நிலம் துண்டாடப்படும் வீதம் அதிகரித்தல், வெள்ளப்பெருக்கு நிகழ்வுகள், சூற்றுப்புறச்சூழல் மாசடைதல் போன்ற பல்வேறு பௌதிக, சமூக, பொருளாதார தாக்கங்களைத் தோற்றுவித்துள்ளது.