Abstract:
இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்தியானது சமனற்ற நிலையில் காணப்படுகின்றது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் இந் நிலையானது பாரிய இடைவெளியில் காணப்படுவதுடன் சமூக, பொருளாதார ரீதியில் பின்னடைந்து காணப்படுகின்ற பகுதிகளும் அதிகமாக உள்ளது. இவ்வாய்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களின் சமூக பொருளாதார அபிவிருத்தி நிலை என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களின் சமூக, பொருளாதார அபிவிருத்தி நிலையை அறிதல் எனும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து 10 சதவீத அடிப்படையில் 14 கிராம சேவகர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டு அங்குள்ள குடும்பங்களில் இருந்து 10 சதவீத அடிப்படையில் 98 குடும்பங்களுக்கு வினாக்கொத்து வழங்கப்பட்டு தரவுகளும் தகவல்களும் பெறப்பட்டன. இதனை விட கலந்துரையாடல், நேரடி அவதானிப்பு, நேர்காணல் மூலமும் தகவல்கள் பெறப்பட்டன. மேலும் இரண்டாம் நிலை தரவுகளும் பெறப்பட்டு அளவு ரீதியாகவும், பண்பு ரீதியாகவும் ஆய்வில் விளக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பெறப்பட்ட தரவுகள் EXCEL மென்பொருளினை பயன்படுத்தி அட்டவணைகளாகவும், பார்,பை வரைபடங்களாகவும் விளக்கப்பட்டுள்ளது. SWOT பகுப்பாய்வு மூலம் ஆய்வு பிரதேசத்தில் உள்ள பலம், பலவீனம், வாய்ப்புகள், தடைகள் என்பன அடையாளப்படுத்தப்பட்டு பிரதேசத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்தியை பலத்தையும் வாய்ப்பையும் பயன்படுத்தி எவ்வாறு விருத்தியுற செய்யலாம் என்பது பற்றி பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மத்திய இட கோட்பாடு. மைய எல்லைக் கோட்பாடு ஆகிய இரண்டு கோட்பாடுகளை ஆய்வு பிரதேசத்தில் பிரயோகம் செய்து பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வின் மூலம் 08 விதமானோர் வீட்டு வசதி அற்றவர்களாகவும், 18 சதவீதமானோர் குடிசை வீட்டிலும், 16 சதவீதமானோர் தகர வீட்டில் வாழ்வது அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் அரச வீட்டு திட்டத்தின் மூலம் 63 சதவீதமானவர்களும், தனியார் வீட்டு திட்டத்தின் மூலம் 10 சதவீதமானவர்களும் வீட்டு வசதியை பெற்றுள்ளதையும் 27 சதவீதமானோர் சொந்த முயற்சியால் வீடுகளை அமைத்துள்ளனர் என்பதையும் அறிய முடிந்தது. ஆய்வு பிரதேசத்தில் சமூக, பொருளாதார ரீதியாக பின்னடைந்த நிலையில் மக்கள் காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. மேலும் ஆய்வு பிரதேசத்தில் சமூக, பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகள் என்பனவும் முன்வைக்கப்பட்டுள்ளது.