Abstract:
இலங்கை நாடானது காலநிலை சார் அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்துவருகின்ற நாடாகும். அவ்வாறு ஏற்படுகின்ற அனர்த்தங்களுள் வெள்ளப்பெருக்கும் ஒன்றாகும். குறிப்பாக தென்மேல் பருவக்காற்று காலங்களில் ஏற்படுகின்ற திடீர் வெள்ளங்களினால் பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப்பிரிவானது அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகின்றது. இத்தகைய திடீர் வெள்ள நிலைமைகளினை நீர்ப்பாசன திணைக்களம், வானிலை அவதான நிலையம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் போன்றன முன்னறிவிப்புகளை விடுத்துள்ள போதிலும் பாதிப்புகள் நிகழ்கின்றன. பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவின் வெள்ள ஆபத்தினை மதிப்பிடுவதனை பிரதான நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வானது இப் பிரதேசத்தின் கடந்த கால வெள்ள நிலைமைகள், அதன் போக்கு, வெள்ளம் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் இடர்படம், ஆபத்துப் படம் என்பவற்றை தயாரித்தல் போன்ற உப நோக்கங்களினையும் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆய்வானது அளவு சார் மற்றும் பண்புசார் முறையினை அடிப்படையாகக் கொண்ட கலப்பு முறை ஆய்வாக அமையப்பெற்றுள்ளது. ஆய்வுக்குத் தேவையான தரவுகள் நேர்காணல், அவதானிப்பு, கலந்துரையாடல் ஆகிய முதலாம் நிலை தரவு சேகரிப்பு முறை ஊடாகவும், இரண்டாம் நிலை தரவுகளான செய்மதி படிமங்கள், மழைவீழ்ச்சி தரவுகள், ஆய்வறிக்கைகள், ஆண்டறிக்கைகள் மூலமாகவும் திரட்டப்பட்டுள்ளன. இவ் ஆய்விற்காக நிலப் பயன்பாடு. தரையுயரம், சாய்வு, மழை வீழ்ச்சி, வடிகால் அடர்த்தி சனத்தொகை அடர்த்தி ஆகிய பரமாணங்கள் வெள்ள அபாய பகுப்பாய்விற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை வெள்ள இடர் மற்றும் ஆபத்து பகுப்பாய்விற்கான LIL ஒருங்கிணைப்பு செயல்முறைக்காக Weighted Sum அணுகுமுறை பயன்படுத்தப்பட்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த கால வெள்ள நிகழ்வுகளை ஆய்வு செய்ய நியமப் படிவுவீழ்ச்சி குறிக்காட்டி (SPI) பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுப்பாய்வின்படி 1995, 2018, 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் நடுத்தர, கடுமையான, தீவிர வெள்ள ஆண்டுகளாக காணப்படுகின்றன. 2021 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளமானது SPI Index 2.0 மேல் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வுப் பிரதேசத்தில் வெள்ள ஆபத்துக்குட்படும் பகுதிகளில் 11.14 சதவீதமான பகுதிகள் அதிக ஆபத்திற்கு உட்படும் பகுதிகளாகவும், நடுத்தர ஆபத்திற்குட்படும் பகுதிகள் 23.91 சதவீதமாகவும். சுமார் 33.71 சதவீதமான பகுதிகள் குறைவான வெள்ள ஆபத்துக்களை எதிர் கொள்வதோடு 31.24 சதவீதமான பகுதிகள் ஆபத்துக்கள் அற்ற பகுதிகளாகவும் காணப்படுகின்றன. மேலும் இப்பகுதிகளில் 24,217 பேர் கடுமையான வெள்ள அனர்த்தம் ஏற்படும் பகுதிகளிலும் நடுத்தர
ஆபத்திற்குட்படும் பகுதிகளில் 27,484 பேரும் 18,450 பேர் குறைவான வெள்ள ஆபத்து
பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.