dc.description.abstract |
இலங்கையில் மனித யானை மோதல் அண்மைக் காலங்களில் மிக முக்கியமானதொரு சவாலாகக் மாறிவருகின்றது. அந்தவகையில், ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம சேவகப்பிரிவுகளில் இப்பிரச்சினை காரணமாக பிரதேச மக்கள் பல்வேறுபட்ட அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இவ் ஆய்வின் பிரதான நோக்கம் ஆய்வுப் பிரதேசத்தில் மனித-யானை மோதலின் தற்கால நிலைமையையும் சவால்களையும் மதிப்பிடுதல் ஆகும். உப நோக்கங்களாக ஆய்வுப்பிரதேசத்தில் மனித யானை மோதலின் தற்கால நிலைமையினை இனங்காணுதல். சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மக்கள் எதிர்கொள்ளும் தாக்கங்களை அடையாளங் காணுதல் மற்றும் மனித யானை மோதலின் பாதிப்பினைக் குறைப்பதற்கான வழிகளை முன்வைத்தல் ஆகியன காணப்படுகின்றன. இந்நோக்கங்களை அடைந்து கொள்ளும் பொருட்டு கலப்புமுறை ஆய்வு பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் வினாக்கொத்து, கலந்துரையாடல், நேர்காணல், நேரடி அவதானிப்பு முதலான முதலாம் நிலைத்தரவு சேகரிப்பு முறைகளில் பெறப்பட்ட தரவுகளுடன், ஆண்டறிக்கைகள், கையேடுகள், சஞ்சிகைகள் போன்றவற்றில் இருந்து பெறப்பட்ட இரண்டாம் நிலைத்தரவுகளும் பிரதானமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. வினாக்கொத்து ஆய்வுக்காக 66 மாதிரிகள் எழுமாற்று அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டன. இவற்றின் ஊடாக சேகரிக்கப்பட்ட தரவுகள் அளவுசார் மற்றும் பண்புசார் முறைகளை பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்பட்டதுடன் Arc GIS 10.4.1 பயன்படுத்தி மனித யானை மோதல் இடம்பெறும் பகுதிகள், காட்டுயானைகள் இடம்பெயர்ந்து வரும் வழிகள். ஆய்வுப் பிரதேசத்தின் வனப்பரம்பல் ஆகியன படமாக்கப்பட்டுள்ளன. ஆய்வின் பெறுபேற்றின்படி, ஹல்துமுல்லப் பகுதியில் மனித யானை மோதல்கள் தற்காலத்தில் அதிகரித்து வருவதோடு நாளுக்கு நாள் மக்கள் காட்டுயானைகளால் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றனர. குறிப்பாக பூனாகலை. அலுத்வெல. திவுல்கஸ்முல்ல, கொஸ்லந்தை, மகலந்த, கொஸ்கம போன்ற பகுதிகளில் யானைத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. மனித யானை மோதலினால் சமூக மற்றும் பொருளாதார ரீதியான பாதிப்புக்கள் அதிகரித்துள்ளதோடு குடியிருப்புக்கள் மற்றும் பயிர்நிலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றன. குடியிருப்பாளர்கள். பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் ஆகியோர் மனித யானை மோதலினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இப்பிரதேசத்தில் வாழும் யானைகள் பெரும்பாலும் வேறு பிரதேசங்களிலிருந்து உணவுக்காகவும் நீருக்காகவும் இடம்பெயர்ந்து வரும் யானைகளாகக் காணப்படுகின்றன. காடழிப்புக்கள். பயிர்ச் செய்கை நடவடிக்கைகள் மற்றும் முறையற்ற குடியிருப்புக்களின் அமைப்பும் குடியேற்றத்திட்டங்களும் போன்ற காரணங்களால் ஹல்துமுல்ல பிரதேசத்தில மனித யானை மோதல் அதிகரித்துள்ளது என்பது கண்டறியப்பட்டது. ஆகவே இப்பிரதேசத்தில் இயற்கைத் தடைகளை அமைத்தல், மீள்காடாக்கம், தெருவிளக்கு பொருத்துதல், ஒலிச்சாதனங்களை பயன்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அதிகரித்து வரும் மனித யானை மோதலைக் குறைக்கலாம். |
en_US |