Abstract:
இலங்கையில் அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்ற முக்கியமான துறையாக சுற்றுலாத் துறை விளங்குகின்றது. கேகாலை மாவட்டத்தில் சுற்றுலாவுக்கு வாய்ப்பான காலநிலை, தரைத்தோற்றம், இயற்கை காட்சிகள், நீர்வீழ்ச்சி, காடுகள், மலைகள் வரலாற்று இடங்கள் போன்றன சுற்றுலாவுக்கு வாய்ப்பான இடங்களாக காணப்படுகின்றன. அதன் அடிப்படையில் "சுற்றுலாத்துறை வளவாய்ப்புகளும் அபிவிருத்தியும் கேகாலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளை மையமாகக் கொண்ட ஆய்வு" என்ற தலைப்பில் மாவனல்லை மற்றும் அரனாயக்க பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் சுற்றுலாத்துறை வாய்ப்பான இடங்களை அடையாளம் காணலும் அபிவிருத்திக்கான உபாயங்களை முன்வைப்பதை நோக்காகக் கொண்டு இவ் ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேரடி அவதானம், கலந்துரையாடல், நேர்காணல்,வினாாக்கொத்து போன்ற முதலாம் நிலைத் தரவு சேகரிப்பு முறையும் பிரசுரிக்கப்பட்ட பிரசுரிக்கப்படாத இரண்டாம் நிலை தரவுகளும் பெறப்பட்டுள்ளதுடன், இவ் வினாகொத்தானது தெரிவு செய்யப்பட்ட சுற்றுலா மையங்களில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள மையங்களை அண்டி வாழும் வீடுகளுக்கு என்ற அடிப்படையில் 100 வினா கொத்து மாதிரிகள் வழங்கப்பட்டு தரவுகள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட தரவுகள் Microsoft Excel 2010 மென்பொருளை கொண்டு அளவுசார் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ArcMap 10.3.1, Google Earth Pro என்பவற்றின் ஊடாக இடரீதியான பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா மையங்கள் தொடர்பாக விளக்கங்கள் முன்வைக்க விபரணப் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு, அபிவிருத்திக்கான உபாயங்களை முன்வைப்பதற்கு SWOT பகுப்பாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அடையாளப்படுத்தப்பட்ட சுற்றுலா மையங்கள் தொடர்பாக CapCut பயன்படுத்தி காணொலி பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு அரனாயக்க பிரதேச செயலாளர் பிரிவில் 8 சுற்றுலா மையங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், மாவனல்லை பிரதேச செயலாளர் பிரிவில் 7 சுற்றுலா மையங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இம் மையங்களில் பாதுகாப்பு இன்மை, முறையாக பராமரிக்கப்படாமை, வழிகாட்டலின்மை போன்ற பொதுவான பிரச்சினைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், அரனாயக்க பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படும் மையங்களில் அதிகளவான பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன், மாவனல்லை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள மையங்களில் ஓரளவு விருத்தி அடைந்த நிலையில் காணப்படுவதுடன், பிரச்சினைகள் குறைவாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுன், இம் மையங்களை விருத்தி செய்வதற்கான பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.