Abstract:
பௌதீக காரணிகள் மற்றும் மானிட காரணிகளின் விளைவாக மனிதனுக்கு எதிர்பாராத
வகையில் ஏற்படும் விபத்தே வீதி விபத்தாகும். இன்று பொதுமக்கள் மத்தியில் பல்வேறு
விளைவுகளை ஏற்படுத்துகின்ற பிரச்சினையாக வீதி விபத்து காணப்படுகிறது. "குருநாகல்
பொலிஸ் பிரிவில் வீதி விபத்துக்களின் போக்கு பற்றிய பகுப்பாய்வு" என்ற
இவ்வாய்வானது குருநாகல் பொலிஸ் பிரிவினை மையமாகக் கொண்டு
மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வானது 2018 2022 வரையிலான காலங்களில் வீதி
விபத்துக்களின் போக்கினை அடையாளப்படுத்துவதனைப் பகுப்பாய்வு செய்வதை பிரதான
நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக இவ்வாய்வில் பொலிஸ் நிலையம்,
போக்குவரத்து பாதுகாப்பு அதிகார சபை மூலம் பெறப்பட்ட இரண்டாம் நிலை தரவுகளை
பிரதானமாகவும் ஏனைய தரவுகளை துணையாகவும் கொண்டு Ms Excel -2010 என்ற
மென்பொருளினைக் கொண்டு அளவு ரீதியாகவும் Maps.me, Arcgis ஆகிய
மென்பொருள்களினைக் கொண்டு பண்பு ரீதியாகவும் பகுப்பாய்வுகள் எண்ணளவாக
மற்றும் விபரண ரீதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், விபத்துக்கள் இடம்பெறுகின்ற
காலம், நேரம், மாதம், வயது மற்றும் தினங்கள் என்ற அடிப்படையில் வேறுபட்ட
காலப்பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்கள், விபத்துக்களினால் ஏற்பட்ட சேதங்கள்,
உயிரிழப்புக்கள் பற்றிய விபரங்கள், விபத்துக்கான காரணிகள் என பல விடயங்களை
குருநாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளமை பகுப்பாய்வின்
பெறுபேறுகளாக முன்வைக்கப்பட்டன. அந்தவகையில் 2018 ஆம் ஆண்டிலே 29.48% மான
விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதுடன் பெரும்பாலான விபத்துக்கள் ஏப்ரல் மற்றும் டிசம்பர்
மாதங்களிலே ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் குருநாகல் பொலிஸ் பிரிவில்
பாதைகளின் தன்மை, முறையற்ற உட்கட்டமைப்பு வசதிகள், முறையற்ற வீதி
வலைப்பின்னல், முறையற்ற வீதி சமிக்ஞைகள் என்பவற்றால் வீதி விபத்துக்கள் இடம்
பெற்றாலும் அதிகமான வீதி விபத்துக்கள் சாரதிகளின் கவனயீனங்கள் போன்ற மானிட
செயற்பாடுகளின் காரணமாகவே இடம் பெற்றுள்ளன என்பது ஆய்வின் முடிவாக
காணப்படுகிறது. மேலும், குறித்த ஆய்வுப் பிரதேசத்தில் மோட்டார் வாகன ஓட்டுனர்களே
அதிகம் விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் அதிகம் விபத்துக்குள்ளாகும் வயது பிரிவினராக
36 45 வயதிற்கிடைப்பட்டவர்கள் என்பதும் கண்டறியப்பட்டது. இதனால் குறித்த
பிரதேசத்தில் கடுமையான சட்டத்தை விதித்தல், சாரதிகளுக்கும் மக்களுக்கும்
விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு வழங்குதல், வீதி ஒழுங்குகளை முறையாக
பேணல் என்பவற்றின் மூலம் விபத்துக்களின் எண்ணிக்கையினைக் குறைத்துக்
கொள்ளலாம்.