Abstract:
இவ்வாய்வானது கிளிநொச்சி பிரதேச செயலக பிரிவின் நிலப்பயன்பாட்டு மாற்றம் பற்றிய ஆய்வாக அமைகிறது. இவ்வாய்வின் நோக்கங்களாக கரைச்சி பிரதேச செயலக பிரிவின் தற்கால கடத்தகால நிலப்பயன்பாட்டினை கண்டறிதல், காடழிப்பு தொடர்பான விடயங்களையும் ஆராய்ந்து அறிதல். 2001இன் பின்னர் நிலப்பயன்பாட்டு மாற்றத்தினை கண்டறிதல், நிலப்பயன்பாட்டு மாற்றத்திற்கான காரணிகளையும், அதனால் ஏற்பட்ட, ஏற்படப்போகும் விளைவுகளையும் கண்டறிதல் என்பனவாக காணப்படுகின்றன. இவ்வாய்வுக்கு முதலாம் நிலைத்தரவுகள், இரண்டாம் நிலைத்தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை நிலஅளவைத் திணைக்களத்திடமிருந்து பெறப்பட்ட 2001ஆம் ஆண்டு மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கான இடவிளக்கப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் Google Earth மூலம் பெறப்பட்ட படங்கள் என்பனவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. GIS நுட்பத்தைப் பயன்படுத்தி 2001, 2021ஆம் ஆண்டுகளின் நிலப்பயன்பாடுகள் மற்றும் நிலப்பயன்பாட்டு மாற்றம் கண்டறியப்பட்டுள்ளது. ஒப்பீடு மற்றும் மாற்றத்தினைக் கண்டறிதல் நுட்பம் போன்ற செய்முறைகள் மூலம் நிலப்பயன்பாட்டு மாற்றம் விளக்கப்பட்டுள்ளது. நிலப்பயன்பாட்டு மாற்றத்தினைக் கண்டறிவதற்கு புவியியல் தகவல் முறைமை இன்றியமையாததாக உள்ளது. அத்துடன் Micro Soft Excel மென்பொருளைப் பயன்படுத்தி நிலப்பயன்பாடுகளின் அளவுகளின் அடிப்படையில் நூற்று வீதங்களும், பை வரைபடங்களும் தயாரிக்கப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச செயலக பிரிவின் கடந்தகால மற்றும் தற்கால நிலப்பயன்பாட்டு மாற்றம் தொடர்பான விபரங்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. கடந்தகால நிலப்பயன்பாட்டில் காடுகளும் தற்கால நிலப்பயன்பாட்டில் குடியிருப்புக்களும் அதிகளவில் காணப்படுகிறது. ஆய்வுப்பிரதேசத்தின் 2001-2021ஆம் ஆண்டு நிலப்பயன்பாட்டு மாற்றத்திலிருந்து கண்டு கொள்ளக்கூடிய நிலப்பயன்பாட்டு மாற்றங்களாக காடுகள் 18.45% இருந்து 14.77% மாகவும், கட்டமைக்கப்பட்ட பகுதிகள் 44% இருந்து 44.66% மாகவும், பயிர்ச்செய்கை 31.19% இருந்து 33.378% மாகவும், நீர் நிலைகள் 1.43% இருந்து 3.363% மாகவும், தரிசு நிலங்கள் 4.32% இருந்து 0.83% மாகவும் மாற்றமடைந்து காணப்படுகின்றன. கரைச்சி பிரதேச செயலக பிரிவின் நிலப்பயன்பாட்டு மாற்றத்திற்கு பொறுப்பான காரணிகளாக குடியேற்றங்கள், காடழிப்பு. குடித்தொகை அதிகரிப்பு. யுத்த நடவடிக்கைகள், பொருளாதார நடவடிக்கைகள், அபிவிருத்தி நடவடிக்கை,நீர்ப்பாசன திட்டங்கள் போன்றன காணப்படுகின்றன. அத்துடன் இக்காரணிகளினால் சூழல் பிரச்சினைகள், நிலப்பெறுமதி அதிகரித்தல், தரைக்கீழ் நீர்வளம் குன்றுதல் போன்ற பல விளைவுகளும் ஏற்பட்டுள்ளன.