Abstract:
இலங்கையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் இடப்பெயர்வு இடம்பெற்ற வண்ணமுள்ளது. அவ்வகையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் நிமித்தம் அதிகமான இளைஞர், யுவதிகள் இடம்பெயர்கின்றனர். "பலாங்கொடை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் இருந்து மத்திய கிழக்கு நாடுகள் நோக்கிய இடப்பெயர்வினால் ஏற்பட்ட சமூக பொருளாதார தாக்கங்கள்" என்ற தலைப்பில் மேறகொண்ட ஆய்வானது வினாக்கொத்து, கலந்துரையாடல், நேரடி அவதானிப்பு ஆகிய முதலாம் நிலைத்தரவுகளையும் இரண்டாம்நிலைத் தரவுகளையும் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த குடும்பங்களில் இருந்து 16% அடிப்படையில் 103 வினாக்கொத்துக்கள் எழுமாற்று அடிப்படையில் வழங்கப்பட்டு தரவுகள் பெறப்பட்டது. பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகள் அளவை ரீதியாகவும்,பண்பு ரீதியாகவும் ஆய்வில் விபரிக்கப்பட்டுள்ளது. மேலும் இடப்பெயர்வு அடர்த்தி, இடப்பெயர்வு பாங்கு,வருமான நிலை என்பவற்றை Arc Map 10.3.1 மென்பொருளினை பயன்படுத்தி படமாக்கப்பட்டதுடன் தேறிய இடப்பெயர்வு, இடப்பெயர்வு வீதம் மற்றும் வயது வகை இடப்பெயர்வு என்பவை கணிக்கப்பட்டுள்ளது. இடப்பெயர்விற்கான காரணிகள் அதனால் ஏற்பட்டுள்ள சாதக பாதக தாக்கங்கள் என்பவையும் ஆராயப்பட்டுள்ளது. ஆய்வுப் பிரதேசத்தில் உள்ள மொத்த சனத்தொகையில் 30 சதவீதமானவர்கள் மத்திய கிழக்கு நாடுகள் இடம்பெயர்ந்துள்ளமையை அறிந்ததுடன் இதில் பெண்கள் 84% வீதமும் ஆண்கள் 16% சதவீதமும் இடம்பெயர்ந்துள்ளனர் என்பதையும் இதனூடாக ஆண்களை விட பெண்களே மத்திய கிழக்கு நாடுகள் நோக்கி அதிகளவில் இடம்பெயர்ந்துள்ளனர் என்பதையும் ஆய்வின் மூலம் அறிய முடிகின்றது.சமூக பொருளாதார தாக்கம் என்ற ரீதியில் நோக்கிய போது மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல முன்னர் இருந்த நிலையினை விட சென்றுவந்த பின்னர் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமையினையும் ஆய்வினூடாக உறுதிப்படுத்த முடிந்தது.