Abstract:
கால்நடை வளர்ப்பானது பொருளாதார ரீதியில் பங்களிப்பினை செய்யக்கூடிய ஒரு வாழ்வாதாரமாகும். இலங்கையின் கால்நடை வளர்ப்பானது மொத்த தேசிய உற்பத்தியில் பங்கு வகிக்கும் ஒன்றாகக் காணப்படுகின்றது. கால்நடை வளர்ப்பானது நிலமின்மை, நீர் பற்றாக்குறை, சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகள், தொழில்நுட்ப பயன்பாடு இன்மை போன்ற பிரச்சனைகளின் ஊடாக நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட மஸ்கெலியா பிரதேச சபையின் மறே, சீதகங்குல, மவுசாகெல ஆகிய கிராம நிலைதாரிகள் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு ''கால்நடை வளர்ப்பின் பரம்பல் பாங்குகளும் எதிர்கொள்ளும் சவால்களும" என்ற தலைப்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆய்வு பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பின் பரம்பல் பாங்கினை கண்டறிதலும் கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்கின்ற சவால்களுக்கு தீர்வாலோசனைகளை முன்வைத்தலும் என்ற பிரதான நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டும், ஆய்வு பிரதேசத்தின் கால்நடை வளர்ப்பின் பரம்பல் பாங்கினை அறிதல், கால்நடை வளர்ப்பில் எதிர்கொள்கின்ற சவால்களை அடையாளப்படுத்துதல், கால்நடை வளர்ப்பில் தங்களது வாழ்வாதார நிலையினை பூர்த்தி செய்துக் கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை முன்வைத்தல் போன்ற உபநோக்கங்களையும் கொண்டு முன்னெடுக்கப்பட்டது. இவ்வாய்வானது அளவு சார் மற்றும் பண்புசார் முறையினை அடிப்படையாகக் கொண்ட களப்பு முறை ஆய்வாக அமைய பெற்றுள்ளது. ஆய்வுக்குத் தேவையான தரவுகள் முதலாம் நிலை தரவு என்ற ரீதியில் வினாக்கொத்து, நேர்காணல், நேரடி அவதானிப்பு என்ற அடிப்படையிலும் இரண்டாம் நிலை தரவும் மூலங்களிலிருந்தும் பெறப்பட்டுள்ளன. பெறப்பட்ட தரவுகள் அளவு சார் மற்றும் பண்புசார் முறையில் பகுபாய்வு செய்யப்பட்டுள்ளன இங்கு கால்நடை பரம்பல் பாங்கு எவ்வாறு காணப்படுகிறது என்பதனை ஆய்வு பிரதேசத்தில் காணப்படுகின்ற கால்நடைகள் வளர்க்கபடும் கிராமங்கள், கால்நடையாளர்களின் விபரம், கால்நடைகளின் விபரம், புல்நில பரம்பல் போன்றவை அடையாளப்படுத்தப்பட்டு பரம்பல் பாங்குகள் எடுத்தியம்பப்பட்டுள்ளது. அத்துடன் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு இத்தகைய சவால்கள் கால்நடை வளர்ப்பினை விருத்தி செய்வதில் தடையாக உள்ளது என்பதினை முன்வைக்கப்பட்டு, கூறப்பட்ட சவால்களுக்கு தீர்வாலோசனைகளுடன் நிலைபேண்தகு விருத்திக்கான மேம்பாட்டு நடவடிக்கைகளையும் முன்வைக்கப்பட்டுள்ளது.