dc.description.abstract |
சனத்தொகை அதிகரிப்பு, நகராக்க விருத்தி போன்ற காரணிகளினால், நுகர்வு மட்டமும் அதிகரித்து வருகின்றது. ஆகவே இதனால் வெளியிடப்படுகின்ற கழிவுகளின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஆகவே வெலிமட பிரதேச செயலக பிரிவின் திண்மக்கழிவகற்றலும் அதன் சவால்களும் தொடர்பான ஆய்வுகள் அத்தியாவசியமான ஒன்றாக விளங்குகின்றமையால், இவ் ஆய்வானது மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்குத் தேவையான தரவுகள் முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலை தரவு மூலாதாரங்களில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. முதலாம் நிலை தரவுகளாக நேரடி அவதானிப்பு, நேர்காணல், வினாக்கொத்துக்கள் என்பவற்றின் மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டதுடன், வினாக்கொத்துக்களை வழங்குவதற்காக ஆய்வுப் பிரதேசத்தில் இரண்டு வீதம் என்ற அடிப்படையில் எழுமாறாக பத்து கிராம சேவகர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டு, 126 வினாக்கொத்துக்கள் வழங்கப்பட்டன. ஆய்விற்காக சேகரிக்கப்பட்ட தரவுகள் Microsoft Excel இனைப் பயன்படுத்தி வரைபடங்களாகவும், அட்டவணைகளாகவும் விபரண ரீதியாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளன. Arc GIS 10.3.1 என்ற மென்பொருளின் மூலமும் படமாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் Google Earth படங்கள் மற்றும் ஒளிப்படங்கள் என்பனவும் ஆய்விற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ் ஆய்வின் மூலம் ஆய்வுப் பிரதேசத்தில் இடம்பெறும் திண்மக்கழிவகற்றல் முறைமைகள், திண்மக்கழிவுகளின் அளவுகள், திண்மக்கழிவுகள் வெளியேற்றப்படும் இடங்கள், திண்மக்கழிவு சார் பிரச்சினைகள், கழிவுகளை வகைப்பாட்டிற்கு உட்படுத்தும் முறைகள், மீள்சுழற்சி செய்யும் முறைகள் என்பன பெறுபேறுகளாக பெறப்பட்டுள்ளன. வெலிமட பிரதேச செயலாளர் பிரிவில் திண்மக்கழிவகற்றல் நடவடிக்கை இடம்பெற்றாலும் கூட மக்களினதும், பிரதேச சபையினதும் முறையற்ற திண்மக்கழிவகற்றல் நடவடிக்கையினால் சூழல் மாசடைந்து வருகின்றமை ஆய்வின் முடிவாகக் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் திண்மக்கழிவு முகாமைத்துவத்தினை வினைத்திறனான முறையில் செயற்படுத்தல்,முறையாக தரம் பிரித்தல், கழிவுகள் உருவாகுவதற்கு முன்னரே குறைத்துக் கொள்ளல், மீள்சுழற்சி மற்றும் மீள்பயன்பாடு, விழிப்புணர்வு நடவடிக்கைகள், கடுமையான சட்ட நடவடிக்கைகள், தரம் பிரித்தலுக்கான இடங்களை பன்முகப்படுத்தல் போன்ற பல செயற்பாடுகளினால் திண்மக்கழிவு பிரச்சினைகளைக் குறைத்துக் கொள்ளலாம். |
en_US |