Abstract:
கண்டல் என்ற சொல் களப்புக்களின் கரையில் வளரும் விசேட இசைவாக்கங்களைக் கொண்ட தாவர இனங்களை பொதுவாகக் குறிக்கின்றது. அந்தவகையில் இவ்வாய்வானது புத்தளம் மாவட்டத்திலுள்ள உடப்பு பிரதேசத்தில் காணப்படும் சதுப்பு நிலங்களிலுள்ள கண்டற் சூழல் தொகுதியின் இனங்களை அடையாளப்படுத்துவதுடன் அக்கண்டற் சூழல் தொகுதியானது ஆய்வுப் பிரதேசத்திற்கு ஏற்படுத்தும் சூழலியல் மற்றும் பொருளாதார ரீதியிலான முக்கியத்துவங்களை இணங்காண்பதோடு அப்பிரதேசவாழ் மக்களால் கண்டற் சூழல் தொகுதிக்கு இழைக்கப்படும் அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு அச்சூழல் தொகுதியினை பாதுகாக்கும் வகையில் அப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட, மேற்கொள்ளப்பட வேண்டிய முகாமைத்துவ நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாய்வானது முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டதாகும். அத்தோடு நேர்காணல் நேரடி அவதானிப்பு மற்றும் தொலைபேசி உடனான நேர்காணலுக்கும் கலந்துரையாடல்கள் மூலமாகவும் இவ்வாய்வுக்கான உறுதிசெய்யப்படக் கூடிய தரவுகளைப் பெற்றுக் கொள்ள முடிந்தது.. இவ்வாய்வின் மூலம் உடப்பு பிரதேசத்தில் காணப்படுகின்ற கண்டல் காடுகளானது அப்பிரதேசவாழ் மக்களுக்கு சூழலியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்து காணப்படுகின்றது. அவற்றிலும் களப்பு மீன்பிடித்துறையின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் செல்வாக்கினைச் செலுத்தி வருகின்றது. 594B உடப்பு 594A ஆண்டிமுனை ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளினையும் அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வினூடாக உடப்பு பிரதேசத்தின் களப்பு பகுதியில் அதிகமான கண்டற் சூழல் தொகுதி காணப்படுகின்றமையினால் உடப்பினைக் காட்டிலும் ஆண்டிமுனை பிரதேசத்திலேயே 34 இற்கும் அதிகமான களப்பு மீன்பிடிக் குடும்பங்கள் வாழ்ந்து வருவதோடு 4 பிரதான மீன்பிடிக் கூட்டுறவுச் சங்கங்களில் அதிகமான உறுப்பினர்கள் காணப்படுவது மட்டுமல்லாமல் களப்பு மீன்பிடியாளர் ஒருவர் குறைந்தது நாளொன்றுக்கு 8000 15000 வரையிலான வருவாயைப் பெறுவதாக இவ்வாய்வினூடாகத் தெரிய வருகிறது. ஆரம்பகாலத்தில் கண்டல் தாவரங்களின் முக்கியத்துவத்தினை அறியாத பிரதேசவாதழ் மக்கள் இறால் பண்ணைத்தொழில், காசன்காணித்திட்டம், விறகுப்பாவனை என்பவற்றுக்காக கண்டல் தாவரங்களை அழித்து வரும் செயற்பாடானது அப்பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பாரிய சவாலாக உள்ளது. ஆனால் அண்மைக்காலமாக தம்முடைய பொருளாதார வாழ்வாதாரமே இவற்றில் தங்கியிருப்பதனை உணர்ந்து அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு முகாமைத்துவ நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அத்தாவரப்பரம்பலினை விரிவு படுத்துவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்வதற்கான நடைமுறைகளை கொண்டுவருவதனோடு இவ்வாய்வு முடிவுக்கு வருகிறது. ஆகவே கண்டற் சூழல் தொகுதியானது இயற்கையாகவே கிடைத்த கொடையாக உடப்பு பிரதேச வாழ் மக்களுக்கு காணப்படுவதனால் அதனை பாதுகாப்பதனில் ஒவ்வொருவரும் ஈடுபாடுடன் செயற்பட வேண்டும்