Abstract:
சேனைப்பயிர்ச்செய்கை அதிகமானோரின் வாழ்வாதார தொழிலாக காணப்படுவதோடு அதிக வருவாயையும் ஈட்டிதருகின்ற தொழிலாகவும் தற்காலத்தில் மாறி வருகின்றது. இவ்வாய்வு போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவில் சேனைப் பயிர்ச்செய்கையாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் எனும் தலைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் இவ்வாய்வின் பிரதான நோக்கமாக போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவில் சேனைப் பயிர்ச்செய்கையின் முக்கியத்துவம் மற்றும் சவால்களை ஆராய்தலினை அடிப்படையாகக் கொண்டு முதலாம் மற்றும் இரண்டாம் நிலை தரவுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவிலிருந்து சேனைப்பயிர்ச் செய்கையில் ஈடுபடும் நான்கு பிரதேசங்களிலிருந்து மொத்த குடும்பங்களில் 25 சதவீத அடிப்படையில் 75 வினாக்கொத்து வழங்கப்பட்டு 1ம் நிலை தரவுகளும் தகவல்களும் பெறப்பட்டன. இதனை விட கலந்துரையாடல், நேரடி அவதானிப்பு, நேர்காணல் மூலமும் தகவல்கள் பெறப்பட்டன. மேலும் இரண்டாம் நிலைத்தரவுகள மட்டக்களப்பு மாவட்ட செயலகம், கமநல திணைக்கள தரவுகள், போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தரவுகள் போன்றன பெறப்பட்டு அளவு ரீதியாவும் பண்பு ரீதியாகவும், இடரீதியாகவும் ஆய்வில் விளக்கப்பட்டுள்ளன. இவ்வாய்வில் சேனைப்பயிர்ச்செய்கையில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் ஆய்வுப்பரதேசத்தில் சேனைப்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் இடங்கள் வரைபடமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் சேனை விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் cavandish இழைய வளர்ப்பு வாழையினம் தொடர்பான தகவல்களும் பெறப்பட்டது. இவ்வாறு பெறப்பட்ட தரவுகள் Excel மென்பொதியினை பயன்படுத்தி அட்டவணைகளாகவும், வரைபடங்களாகவும், விளக்கப்படங்களாகவும் விளக்கப்பட்டுள்ளது. Arc GIS மென்பொதியினையும் பயன்படுத்தி ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்ட பிரதேசம் மற்றும் சேனை பயிரிடப்படும் இடம் என்பன படமாக்கப்பட்டுள்ளன. இவ்வாய்வினூடாக 2018 காலத்தினை விட 2022 காலத்தில் 19.25 ஏக்கர் நிலப்பரப்பு சேனைநிலம் குறைவடைந்துள்ளதுடன் 54 சதவீதமானவர்கள் கடனைப் பெற்று சேனைப்பயிர்ச்செய்கை மேற்கொள்வதால் பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை அடையமுடியாதுள்ளவர்களாக இருப்பதனையும் அறியமுடிந்தது. மேலும் சேனைப்பயிர்ச்செய்கை தொடர்பிலான சவால்களும் இனங்காணப்பட்டு அதற்கான தீர்வுகள் இவ்வாய்வில் முன்வைக்கப்பட்டுள்ளது.