dc.description.abstract |
கிழக்கு மாகாணத்தின் கரையோர பிரதேசங்கள் பல்வேறுபட்ட மாற்றங்களுக்கு உள்ளாகி வருகின்றன. அவ்வகையில் குறித்த ஆய்வின் பிரதான நோக்கமானது கல்குடா தொடக்கம் கதிரவெளி வரையிலான கடற்கரையோரத்தில் 2003-2023 காலப்பகுதியில் காணப்படுகின்ற நிலவுருவங்களில் ஏற்பட்டு வரும் உருவவியல் ரீதியான மாற்றங்களை அவதானித்தலாகும். உபநோக்கமாக குறித்த கரையோர நிலவுருவங்களை அடையாளம் காணலும் மற்றும் கரையோர சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்கள் சிலவற்றை குறிப்பிட்டு அவற்றில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களையும் குறிப்பிடுவதாக இவ் ஆய்வு அமைகின்றது. குறித்த ஆய்வை மேற்கொள்வதற்காக முதலாம் நிலை தரவுகளான நேரடி அவதானிப்பு மூலம் பெறப்பட்ட விடயங்களும் குறித்த பிரதேச மக்களுடன் மேற்கொண்ட குவியக்குழுக் கலந்துரையாடல்களின் அடிப்படையிலான தகவல்களும் பிரதான தகவல் தருநருடனான நேர்காணல் அடிப்படையிலான தகவல்களும் பயன்படுத்தப்பட்டதோடு Google Earth மென்பொருளானது பிரதான தரவு மூலமாக பயன்படுத்தப்பட்டு மாற்றப்பகுப்பாய்வு முறை, சாதாரண புள்ளிவிபரவியல் முறை ஆகியவற்றுடன் பண்புசார் பகுப்பாய்வும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக குறித்த கரையோரத்தில் ஆண்டு ரீதியாக ஏற்பட்டு வரும் மாற்றங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. மேலும் படமாக்கல் செயன்முறைக்காக Arc GIS 10.3.1 என்னும் மென்பொருளும் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வின் பெறுபேற்றின் அடிப்படையில் கரையோரம் A, B, C எனும் வலயங்களாகப் பிரிக்கப்பட்டு 14 நிலவுருவங்கள் அடையாளம் காணப்பட்டது. குறித்த கரையோரத்தில் A, C எனும் வலயங்களில் அரித்தல் மற்றும் படிதல்சார் நிலவுருவங்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டதுடன் B வலயத்தில் குறைவான நிலவுருவங்கள் அடையாளம் காணப்பட்டன. இதில் கூடுதலாக படிதல்சார் நிலவுருவங்கள்' அடையாளம் காணப்பட்டுள்ளன. A வலயத்தில் அடையல் மேடு, வாழைச்சேனைப் பகுதியில் புதிய தீவு, கூழாங்கன்னாக்கு போன்ற நிலவுருவங்கள் குறித்த ஆய்வு காலப்பகுதியில் புதிதாகத் தோற்றம் பெற்றனவாகவும், ஆற்றுவாாய் மணற்றடை, குடாவாய் மணற்றடை, கஸ்ப், நாசிவன் தீவு முனைசார் கரை, மணற் கரையோரம், A வலய தீவு ஆகிய நிலவுருவங்கள் குறிப்பிட்ட காலப்பகுதியில் பெருமளவில் மாற்றங்களை எதிர்கொண்டு வந்த ஒன்றாகவும் காணப்படுகின்றது. அந்த வகையில் குறித்த ஆய்வுப் பிரதேச மணற்கரையோர பரப்பு சுமார் 36 ஹெக்டேயர் அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது 2004 நவம்பர் மாதம் 199 ஹெக்டேயராக இருந்த கடற்கரை பரப்பானது 2022 நவம்பர் மாதம் 235 ஹெக்டேயராக அதிகரித்துள்ளது. மேலும் இங்கு கரையோர சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த கரையோரத் தாவரங்கள், முருகைக்கல், கரையோர மணல் மற்றும் கரையோரப் ஒரு
பாறைகள் போன்ற அம்சங்களின் மாற்றத்தில் செல்வாக்கு செலுத்துகின்ற காரணிகளாக அபிவிருத்தி நடவடிக்கை, தொழில் நடவடிக்கை, வீட்டுத்தேவை, கரையோர மாசடைவு, கரையோர அரிப்பு போன்ற மானிட மற்றும் இயற்கை காரணங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கான தீர்வுகளாக செயற்கை மணற்றடைகளை அமைத்தல், விழிப்புணர்வூட்டல், கண்டல் தாவரங்களை மீள் நடுகை செய்தல்,முறையான சட்டநடவடிக்கை எடுத்தல் போன்ற பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன |
en_US |