dc.description.abstract |
கல்விச் சமூகமயமாக்கம் என்பது கல்வியினூடாக சமூகத்திற்கு ஏற்புடைய தனி நபர்களை உருவாக்குவதாகும். கட்டிளமைப் பருவ மாணவர்களின் கல்விச் சமூகமயமாக்கலில் சமவயதுக் குழுக்கள் எந்தளவில் செல்வாக்கு செலுத்துகின்றனர் என்பதைக் கண்டறிந்து கல்விச்சமூகமயமாக்கலை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் விதந்துரைப்புக்களையும் முன்வைப்பதே இவ்வாய்வின் நோக்கமாக அமைகிறது. மூதூர் கல்வி கோட்டத்திலுள்ள 31 பாடசாலைகளில் 25 சதவீதத்தில் ஒதுக்கீட்டு மாதிரி அடிப்படையில் 8 பாடசாலைகள் ஆய்வின் மாதிரியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. நோக்க மாதிரியின் அடிப்படையில் 8 அதிபர்களும், தரம் 8 தொடக்கம் 13 வகுப்புகளுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் 104 பேரிலிருந்து ஆண், பெண் என படையாக்கம் செய்து இலகு எழுமாற்று மாதிரியில் 3:1 எனும் விகிதத்தில் 35 ஆசிரியர்களும், 1036 மாணவர்களை வகுப்பு அடிப்படையில் ஆண், பெண் என படையாக்கம் செய்து இலகு எழுமாற்று மாதிரியில் 10:1 எனும் விகிதத்தில் 104 மாணவர்களும், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு 104 பெற்றோரும் மாதிரிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து தரவுகளை பெறுவதற்காக வினாக்கொத்து, நேர்காணல், போன்ற ஆய்வு கருவிகள் பயன்படுத்தப்பட்டன. ஆய்வின் சிறப்பு நோக்கங்களை அடைந்து கொள்ளும் வகையிலும் ஆய்வு வினாக்களுக்கு விடைகளைப் பெறும் வகையிலும் வினாக்கள் தயாரிக்கப்பட்டு ஆய்வுக் கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மாதிரிகளிடமிருந்து பெறப்பட்ட அளவு ரீதியான மற்றும் பண்பு ரீதியான தரவுகள் Microsoft Excel ஊடாக பகுப்பாய்வு செய்யப்பட்டு வியாக்கியானமும், கலந்துரையாடலும் இடம்பெறுகிறது. கட்டிளமைப்பருவ மாணவர்களின் கல்விச் சமூகமயமாக்கலில் சமவயதுக் குழுக்களின் செல்வாக்கு அதிகமாகக் காணப்படுவதுடன் அவை பெரும்பாலும் நேர் மறை விளைவுகளை ஏற்படுத்துவதாக உள்ளது. மாணவர்கள் தமது அதிக நேரத்தை சமவயதுக் குழுக்களுடனேயே கழிப்பதால் கல்வியறிவு, குழு உணர்வு, கற்றல் ஊக்கம் என்பவற்றை பெறுவதோடு அதிகளவு உள ரீதியான பிரச்சினைகளுக்கும் உட்படுகின்றனர். பாடசாலையில் சமூகத் திறன்களையும், உணர்வுகளையும் மேம்படுத்தும் எந்த செயற்றிட்டங்களும் முன்னெடுக்கப்படாமையால் மாணவர்கள் சிறந்த கல்விச் சமூகமயப்படுத்தலை பெறத் தவறுவதோடு இள வயதிலேயே போதை பொருள் பாவனை. களவு செய்தல், பொய் கூறுதல் போன்ற சமூக முரண்பாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான மாணவர்களுக்கு சவால்களுக்கு முகங்கொடுக்கும் மனப்பாங்கை ஏற்படுத்தல், உரிய வளவாளரைக் கொண்டு உளவியல் ஆலோசனைகளை முன்னெடுக்கும் செயற்றிட்டங்களை ஒழுங்கமைத்தல், பெற்றோர் கூட்டங்களை ஒழுங்குபடுத்தல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்தல் அவசியம் என்பது பற்றிய விதந்துரைப்புக்களும் இங்கு முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |