Abstract:
"பல்கலைக்கழக மாணவர்களின் வினைத்திறன் மிக்க கற்றலில் நூலகப் பயன்பாட்டின் அவசியம்" என்னும் தலைப்பில் கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர்களை அடிப்படையாகக் கொண்ட அளவை நிலை ஆய்வாக இடம்பெற்றுள்ளது. சமூகத்திற்கு மிகச்சிறந்த பங்களிப்பு செய்பவைகளாக நூலகங்கள் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக நாட்டிற்கு சேவை செய்யும் புத்திஜீவிகளை உருவாக்கும் பல்கலைக்கழகங்கள் நூலகத்தை சுமந்திருப்பது அத்தியாவசியமானதொன்றாகும். மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளுக்கு துணை புரிதல், அறிவைப் பெற்று வழங்குதல், ஆய்வுகளை மேற்கொள்ளல் ஆகிய நோக்கங்களுக்காக பல்கலைக்கழகங்களில் நூலகங்கள் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக பொது நூலகத்தை மையப்படுத்தி மாணவர்களுக்கும் நூலகத்திற்கும் இடையிலான தொடர்பை வெளிக்கொண்டுவரும் முகமாக இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாதிரிகளாக கலைப்பீடத்தை சேர்ந்த 59 விரிவுரையாளர்களும் ஒரு நூலகரும் நோக்க மாதிரி தெரிவினூடாக தெரிவு செய்யப்பட்டதுடன் இவ்வாய்வு கலை கலாசார பீடத்தில் உள்ள 2676 மாணவர்களை வருட அடிப்படையில் ஆண்,பெண் என படையாக்கம் செய்து பின் இலகு எழுமாற்று தெரிவின் ஊடாக 10:1 என்ற அடிப்படையில் 268 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். மேலும் தெரிவு செய்யப்பட்ட மாதிரிகளுக்கு ஆய்வு நோக்கத்திற்கு அமைய வினாக்கொத்துகள் விரிவுரையாளர்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டதுடன் நேர்காணல் மூலம் நூலகரிடம் இருந்தும் தரவுகள் பெறப்பட்டன. பெறப்பட்ட தரவுகள் அளவு ரீதியாகவும் பண்பு ரீதியாகவும் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டது. Ms Excel மூலம் தரவு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட தரவுகள் சலாகை வரைபடம், வட்ட வரைபடம் மற்றும் அட்டவணைகள் மூலம் வகைக்குறித்து விபரணப்படுத்தப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளன, நூலக வளங்கள் திருப்திகரமான உள்ளது. நூலகத்தைப் பயன்படுத்துவதன் அவசியம் கற்றலுக்கான சூழல் கிடைக்கப் பெறுகின்றது போன்றவற்றை மாணவர்கள் ஏற்றுக் கொண்டாலும் நூலகத்தின் உடனான ஈடுபாடு குறைவாக உள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதாவது நூலகம் கற்றலுக்கான வசதிகளை போதிய அளவு கொண்டிருப்பினும் அதனை கலைப்பீட மாணவர்கள் பயன்படுத்தும் அளவு குறைவாக உள்ளது என்பதனை இவ்வாய்வின் முடிவாக எடுத்துக் கொள்ளலாம். மாணவர்களை விழிப்புணர்வு பெறச் செய்வதில் இவ்வாய்வு உந்து சக்தியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.